பக்கம்:கவிஞர் பேசுகிறார், பாரதிதாசன்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

தமிழும் பாரதியும்


தமிழ் இனிமையானது என்பதை நாம் ஆட்சேபிக்கவில்லை. தமிழுக்குச் சொல்லப்படும் உயர்வைத் தாம் நாம் ஆட்சேபிக்கிறோம். மனிதன் செயலற்றுப் போகும்படி தமிழின் உயர்வு கற்பித்து எழுதிவைக்கப்பட்டிருக்கிறது. பாஷையே முத்தொழிலையும் செய்யவல்ல சக்தியுடைய தென்றால், அந்த பாஷையை நாம் சீர் திருத்த முயலுவானேன் என்று தமிழன் நினைத்தான். ஒரு கதை சொல்லுகிறேன். ஒரு அரசன் வீட்டில் பலர் திருடினர். திருடின சொத்துக்களை அலமாரியும் பூமிக்கடியிலும் வைத்திருந்தனர். கோயில் பூசாரி சுவாமியின் கழுத்தைத் திருகி அதன் தொந்திக்குள் திருட்டுச் சொத்தைப் போட்டு விட்டார். அரசனது ஆட்கள் மற்ற இடங்களிலிருந்த சொத்துக்களைக் கண்டு பிடித்து விட்டனர். ஆனால் சுவாமியின் வயிற்றுக்குள்ளிருந்ததைப் பார்க்கவில்லை. அய்யர் திருடி கடவுளின் வயிற்றில் வைத்து வைப்பாரென்று மக்கள் நினைப்பார்களா? இல்லை கடவுள் பெயரால் அமைக்கப்பட்ட சிலையில் திருட்டுச் சொத்து வைக்கப்பட்டிருக்கும் என்று காவலாளிகள் நினைக்கவில்லை,

அப்படி நினைப்பது - சிலையை எடுத்துப் பார்க்க எண்ணுவது பக்தியாளர்களுக்கு விரோதமான தெனக்கருதி விட்டனர். இதனாலேயே பார்க்க முடியாமற்போய் விட்டது. எவ்வளவு மரியாதை செய்யலாமோ அதற்குமேல் லட்சம் மடங்கு சொல்வது ஆபத்தில் தான் முடிகிறது.


கவிஞர் பேசுகிறார்