பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

162

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நடக்கிறது. நாம், மகாசந்நிதானத்தின் அழைப்பின் பேரிலும், தன் விருப்ப அடிப்படையிலும் மருத்துவமனைக்கு அடிக்கடி சென்று பார்த்து வந்தோம். பலநாட்கள் உருண்டோடிவிட்டன. -

ஒரு நாள் இரவு எட்டு மணியளவில் மகாசந்நிதானத்துக்கு மயக்கம் வந்திருக்கிறது. "இது ஆபத்தான அறிகுறி. ஆயினும் முயற்சி செய்கிறோம்” என்று தலைமை மருத்துவர் ஆள்மூலம் குன்றக்குடியில் இருந்த நமக்குச் சொல்லியனுப்பு கிறார். அப்போது தொலைபேசி வசதி ஆதீனத்தில் இல்லை. உடன் மகாசந்நிதானத்தைக் காண விரும்பினோம். ஆதீனத்து கார் திருப்புத்துார் மருத்துவ மனையிலேயே நிற்கிறது. அதைக் கேட்டுப் பெற அச்சம்! அதுமட்டுமல்ல, இனிமேல் கார் வருவித்தும் போவதில் காலதாமதமும் ஆகும். வாடகைக்கு கார் எடுக்கவும் இயலாத நிலை. அதாவது நம் கையில் பணமில்லை. இந்நிலையில் அலுவலக ஏவலர் நடேசன் என்பவரின் உதவி கிடைத்தது.

நடேசன் நல்ல விசுவாசமான உறுதியான ஏவலர், அவர் மகன் ந. பழனிச்சாமி. பழனிச்சாமி மகன் பாண்டித் துரை. இவர்கள் இருவரும் இப்போது நம்மிடம் பணிசெய்து வருகின்றனர். பழனிச்சாமி படுகோபி. ஆயினும் நிறுவனப் பற்றுடையவர். பாண்டித்துரை அவர் தாத்தா போல வெகுளி யல்ல; தந்தை போல படுகோபியும் அல்ல. நல்ல பிள்ளை. வளர்ந்து வருகிறார். குன்றக்குடி சண்முகநாதன் அச்சகம் இவர் நிர்வாகத்தில்தான் இருக்கிறது. அறிக அறிவியல் இதழை அச்சிட்டு வருபவரும் இவரே.

நடேசனும் நாமும் ஆளுக்கு ஒரு சைக்கிள் எடுத்துக் கொண்டு திருப்புத்தூர் மருத்துவமனைக்குக் குன்றக்குடியி லிருந்து பயணமானோம் !. நாங்களிருவரும் மருத்துவ மனைக்குச் சென்றடையும் நேரத்தில் மகாசந்நிதானம் மயக்கம் தெளிந்து உணர்வுடன் இருந்தார்கள் நலம் விசாரித்தறிந்த பிறகு மகாசந்நிதானம் "எப்படி வந்தீர்கள்?"