பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் மனிதர்களும்

225



பாரதப் பிரதமர் வருகிறார் என்ற காரணத்தால் நன் கொடைகள் குவிந்தன. ஆனால், பாரதப் பிரதமரின் வருகை தள்ளிக்கொண்டே போயிற்று.

இடையில் கேதார் யாத்திரை செல்ல நமக்கு விருப்பம். பயணம் தொடங்கியாயிற்று. திருவேணியில் இடைத்தங்கல் இருந்தபோது நேரு குன்றக்குடிக்குப் பள்ளிச் சீரமைப்பு மாநாட்டுக்கு வர நாள் கொடுத்துவிட்டார் என்ற செய்தி கிடைத்தது. கேதார் யாத்திைைரத் தொடர்ந்து மேற்கொள்ளாமல் குன்றக்குடிக்குத் திரும்ப வேண்டியதாயிற்று. பள்ளிச் சீரமைப்பு மாநாட்டு வேலைகள் சுறுசுறுப்பாக நடந்தன. இடையில் மாநாடு நடக்கும் இடம் பற்றிய சிக்கல் தோன்றியது.

கலைத் தந்தை கருமுத்து தியாகராச செட்டியார் ஆ. தெக்கூரில் புதிய பள்ளிக் கட்டடம் ஒன்று கட்டியிருந்தார். அதை நேருவைக் கொண்டு திறக்கவும் விரும்பினார். பெருந் தலைவர் காமராஜர் "பெருஞ்செலவு வருமே! ஆதலால், ஆ. தெக்கூரில் நடத்தும் பொறுப்பை கருமுத்து தியாகராச செட்டியாரிடம் ஒப்படைக்கலாமே! இதமாக அடிகளாரிடம் கேட்டு முடிவு செய்யுங்கள்” என்று இயக்குநரிடம் கூற, இயக்குநர் தயக்க உணர்வுடன் நம்மிடம் ஆலோசனை கேட்டார். கருமுத்து தியாகராச செட்டியார் கேட்கும் நிலையில் நாம் எந்த ஆட்சேபணையும் கூறவில்லை. நேருஜி குன்றக்குடி வழியாக ஆ. தெக்கூர் வருவதாகத் திட்டம் தீட்டப்பெற்றது. அனுபவங்கள் வேறுமாதிரியாக அமைந்தன.

1959-ம் வருடம் ஏப்ரல் 15-ல் நேருஜியும் வந்தார். ஆனால், குன்றக்குடியில் நாம் இருந்து வரவேற்கத்தான் இயலவில்லை. பள்ளிச் சீரமைப்பு மாநாட்டுப் பணிகள் காரணமாக ஆ. தெக்கூரிலேயே தங்கவேண்டிய நிலை, ஆனால், "குன்றக்குடியில் மிகவும் சிறப்பான வரவேற்பு!”