பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எங்கே போகிறோம்!

303


வழி, முறை, தொலைவு ஆகியவற்றையும் முடிவு செய்யுங்கள். தைரியமாக, துணிவாக, நடைபோடுங்கள்! வெற்றி பெறலாம்.

எங்கே போகின்றோம் என்ற கேள்விக்குப் பதிலாக நாம் எங்கே போக வேண்டும் என்ற கேள்வியைக் கேட்கப் போகின்றோம். ஆம்: மனிதனை முதலில் உருவாக்க வேண்டும். படிப்பாளிகளை உருவாக்கி இருக்கிறோம். ஆனால் படைப்பாளிகளை உருவாக்குகின்ற கல்வி, படைப்பாளிகளை உருவாக்குகின்ற அறிவு, திசை நோக்கி நாம் இனி போகவேண்டும். உழைப்பு என்பது உயர்ந்தது. மதிப்பில் உயர்ந்தது. தவமனையது. அந்த உழைப்பை அலட்சியம் செய்யக் கூடாது. ஒரு நாட்டு மக்கள் கடுமையாக உழைத்தால் அந்த நாடு வளரும்! வாழும்!

எந்த ஒரு நாட்டிலும் எளிதாக மாற்றத்தை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மாற்றம் என்பது வளர்ச்சிக்குத் தவிர்க்க முடியாதது. எங்கு வளர்ச்சி இருக்கிறதோ அங்கு மாற்றம் இருக்கும். மாற்றம் இருக்கின்ற இடத்தில் வளர்ச்சி இருக்கும். இவற்றை நோக்கி நாம் பயணம் செய்ய வேண்டும்.

இந்த நாடு பரம்பரை பரம்பரையாக வேளாண்மையில் சிறந்து விளங்கிய நாடு. "உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” என்பான் பாரதி. ஆனால் இந்த நாட்டில் கோடிக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தரிசாகக் கிடக்கின்றன. சாதாரணமாக கிராமப் புறங்களில் பெண் சிரித்தால், பலருக்கு, ஆண்களுக்குக் கோபம் வரும். பெண் சிரித்து விட்டாளே என்று கோபப்படுவார்கள். ஆனால் இந்த நாட்டில் நீண்ட நாட்களாக ஒரு பெண் சிரித்துக் கொண்டே இருக்கிறாள். அதிலும் பரிகாசமாக நம்மைப் பார்த்து நகைத்துக் கொண்டிருக்கிறாள். அந்தப் பெண் யார்? நிலமகளாகிய பூமி தேவி.

“இலம் என்றசை இருப்பாரைக் காணின்
நிலம்என்னும் நல்லாள் நகும்”