பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

342

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சில சமூகங்கள், அறியாமையின் காரணமாகவும் ஏழ்மையின் காரணமாகவும் தங்களுடைய வாழ்க்கையை மாற்றியமைத்துக் கொள்ளத் திறனற்றுப் போய்விட்டன.

இந்த மாதிரிச் சூழ்நிலைகளில் புதிய புதிய உத்திகளையும் திறன்களையும் மக்களிடையில் அறிமுகப்படுத்தி விழித்தெழச் செய்யவேண்டும். இந்த முயற்சியில் வெற்றி பெற்றால் வளர்ச்சி நிகழும், மாற்றமும் ஏற்படும்.

இங்ஙனம் சமுதாயத்தில் மாற்றங்களைச் செய்யும் பொழுது, இருக்கிற ஒன்றை - ஒரு தீமையை அகற்றினால் போதாது. அந்த இடத்தில் ஒரு நல்லதை வைக்கத் தவறிவிடக் கூடாது. தீமையை விலக்குவதற்குள்ள ஒரே வழி, நல்லதைக் காட்டுவதேயாம்.

இங்ஙனம் மாற்று வழி காட்டத் தவறிவிட்டால் மக்கள் மீண்டும் பழைய தடத்திலேயே செல்வர். சமூக மாற்றம் எளிதில் நிகழ முடியும். ஆனால், ப்ழைய சமூக அமைப்பில் ஓர் அந்தஸ்தைப் பெற்றவர்கள் - அனுபவித்தவர்கள் எதிர்ப்பார்கள். தொடக்கத்தில் அது கடுமையான எதிர்ப்பாகத் தோன்றினாலும் காலப்போக்கில் சமுதாய மாற்ற முயற்சிகள் வெற்றி பெறும்.

போதும், போதும் தேக்கம்! வேண்டாம், வேண்டாம் வளர்ச்சியே இல்லாத சமூக அமைப்பு! வளர்ச்சியும் மாற்றங்களும் நிகழக்கூடிய திசையில் நடப்போம்!

நாம், அடிக்கடி பின்னோக்கிப் போகின்றோம். வழி வழியாக நமக்குக் கிடைத்துள்ள கருத்துக்கள் கூட, நம்மைப் பின்னுக்கு இழுக்கின்றன. விஞ்ஞானம், தொழில் துட்பம் இல்லாமல் எப்படி வளர்ச்சியைக் காண முடியும்? மாற்றங் களைச் செய்ய முடியும்!

அதேபோழ்து கடந்தகாலப் பண்பாட்டினை மறந்தும்,முன்னேற்றமடைய முடியாது. அப்படியே முடிந்தாலும் அந்த முன்னேற்றம் பயனுள்ளதாக அமையாது.