பக்கம்:சங்க கால வள்ளல்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7

சென்றுள்ளார். நீயும் பாடி ஆடிச் செலின் நல்லணி கலன்களைப் பெறுவை,” என ஆற்றுப்படுத்தி அனுப்பியுள்ளார். இதனால், பாரி தன்னிடம் வருகின்றவர்களுக்கெல்லாம் ஈபவன் என்பது தெற்றெனப் புலனாகிறதன்றோ!


மூவேந்தர் முற்றுகையும் கபிலர் கட்டுரையும்

பாரிக்கும் கபிலருக்கும் நெருங்கிய நட்புத் தொடர்பு உண்டு. இவன் கொடையும் வீரமும் கண்ட கபிலர், இவனிடத்திலேயே உறைவாராயினர். தம்மைப் பாரியின் நண்பர் என்றே பலரிடமும் கூறிக்கொண்டனர்; பாரியின் மகளிரையும் தம் மக்களாகக் கருதியவர். இருங்கோவேளிடம் தம்மைப்பற்றிக் கூறிக்கொள்கையில் "இவர் யார் என்குவையாயின், இவரே பாரி மகளிர், யானே தந்தை தோழன். இவர் என் மகளிர்,” என்று இத்துணை உரிமை பாராட்டிப் பேசியுள்ளார். பாரி இறந்தபின் அம்மகளிர்க்கு மணமுடித்துவைக்கும் பொறுப்பினைத் தம்மதாகவே கொண்டனர் என்றால், வேறு கூறுவானேன் ?

ஒரு சமயம் சேர சோழ பாண்டியர்களான முடியுடை மன்னர் மூவரும் கூடிப் பாரியின் பறம்பு மலையை முற்றுகையிட்டனர். இம்முற்றுகையால் உள்ளிருப்பவர் வெளியிலும், வெளியில் இருப்பவர் உள்ளும் போதற்கின்றி வருந்தினர். அந்த நிலையில் பாரியின் நெருங்கிய நண்பரான கபிலர், அம் மன்னர் முன்னர் நின்றார். மன்னர்களை உற்று நோக்கினார். உள்ளதை உள்ளவாறு உரைக்க வேண்டுமென எண்ணங்கொண்டார். அவர்களை நோக்கி “முடியுடை மூவேந்தர்காள்! நீங்கள் எதிரி