பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

101

புகுந்து இரண்டு பெரிய நீர்வீழ்ச்சிகளாக முறையே 180 அடி உயரத்திலிருந்தும், 200 அடி உயரத்திலிருந்தும் விழுகிறது. கூடலூர் - மைசூர் பாதையில் நான்கு கல்லுக்கு அப்பால் வரும்போதே நீர் விழும் ஒலி நம் காதில் விழும். அங்கிருந்து காண்போருக்கு, பீடபூமியாகிய பெருஞ் சுவரில், பனிக் கட்டியால் செய்து சார்த்தப்பட்ட உயர்ந்த ஏணிகள் போல் இவ் வீழ்ச்சிகள் தோன்றும்.

பிறகு பைக்காரா ஆறு மெதுவாக இறங்கி வயநாட்டுக் காடுகளில் நுழைந்து, மறுபடியும் கிழக்கில் திரும்பிச் சென்று கூடலூர் - மைசூர் பாதைக்கருகிலுள்ள திப்பக்காடு என்ற இடத்தில் மறுபடியும் ஒரு நீர்வீழ்ச்சியை உண்டாக்குகிறது.

பைக்காரா ஆற்றைத் தோடர்கள் புண்ணிய ஆறாகக் கருதுகின்றனர். கருவுற்ற தோடர் குலப் பெண்கள் இவ் வாற்றைக் கடக்கத் துணியமாட்டார்கள். ஆண்கள்கூட இவ்வாற்று நீரை எதற்கும் பயன்படுத்துவதில்லை. மிகவும் இன்றியமையாத நேரங்களில் இவ்வாற்றைக் கடந்து செல்ல நேரிட்டால்தான் நீரைத் தொடுவார்கள். ஆற்றைக் கடந்ததும், ஆற்றை நோக்கித் திரும்பி வணங்கிவிட்டுத்தான் செல்வர். பைக்காரா தங்கல் மனைக்கு அருகிலுள்ள பாலத்தின் மேல் ஏறி ஆற்றைக் கடந்தால் கூட, அதற்கு மரியாதை செலுத்தாமல் தோடர்கள் செல்லமாட்டார்கள். பைக்காரா நீர் வீழ்ச்சி மின்சாரத் திட்டம் மிகவும் குறிப்பிடத்தக்கது.

காடுகள்

இந்திய நாட்டிலுள்ள காடுகள், நாட்டின் விவசாயப் பொருளாதார முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகிக்கின்றன. நம் நாட்டில் 2.81 லட்சம் சதுர மைல் பரப்புள்ள காடுகள் உள்ளன. நம் நாட்டின் மொத்தப்