பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

176

கி. பி. 1869-ஆம் ஆண்டு ஜிம்கானா கழகம் (Gymkhana Club) தோன்றியது. அது இப்பொழுது ஊட்டி குழிப்பந்தாண்டக் கழகம் (Golf Club) என்ற பெயர் கொண்டு விளங்குகிறது. ஊட்டியிலுள்ள வேட்டையர் கழகம் (Hunt Club) இப்பொழுது சிறந்த முறையில் உள்ளது. இவைகளேயன்றி வேறு சில கழகங்களும் உள்ளன. அவற்றில் குறிப்பிடத் தக்கது லாலி நிறுவனம் (Lawly Institute) என்பதாகும், கோடைக் காலத்தில் மட்டைப் பந்தாட்டப் (Tennis Championship) போட்டியை இது சிறந்த முறையில் நடத்தி வைக்கிறது.

கோடையில் இந்திய நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் பெருந்திரளாக இங்கு வந்து கூடுகின்றனர். எனவே அவர்களுடைய வசதிக்காகப் பல சிறந்த உணவு விடுதிகளும், தங்கல் மனைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கோடையில் தங்குவதற்கென்று வீடுகள் குடிக் கூலிக்கு விடப்படுகின்றன.

சிறப்பு :

நீலகிரி மலையின் பரப்பு 900 சதுர மைல் ஆகும். இதன்மீது அமைந்துள்ள குறிஞ்சி நகரமான உதகமண்டலம் இயற்கையழகில் ஈடு இணையற்றது. சர் சி. பி. இராமசாமி ஐயர் ஒரு சமயம், “உலகிலேயே மிகவும் அழகிய குறிஞ்சி நகரம் உதகமண்டலம்" என்று பாராட்டிப் பேசினார். 'குறிஞ்சி நகரங்களின் அரசி' (Queen of Hill stations) என்ற சிறப்புப் பெயருக்கு உதகமண்டலம் தகுதியுடையது. எக்காலத்தும் இது தன் சிறப்புக் குன்றாமல் விளங்குகிறது. ஏப்ரல் தொடங்கி ஜூன் திங்கள் முடியும் வரை இதைப்போல் மகிழ்ச்சியும் மலர்ச்சியும் தாண்டவமாடும் இடம் எதையும் இந்திய நாட்டில் காண முடியாது. இந்திய நாட்டின் எல்லாப் பகுதிகளிலிருந்தும், இன்பத்தை நாடுவோர் இங்கு வந்து குவிகின்றனர். விருந்துண்