பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

229

நிறையத் தென்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டிருக்கின்றனர். இச் சின்னங்களைப் போல் இந்திய நாட்டின் வேறு எப் பகுதியிலும் கிடைக்கவில்லை. இச் சமாதிகள் பெரும்பாலும் 8 அடி நீளமும் 3 அடி அகலமும் உடையனவாய் சொரசொரப்பான கற்களால் பெட்டி போல் செய்யப்பட்டிருக்கின்றன. ஒரு பக்கம் திறந்திருக்கிறது. துருப் பிடித்த அரிவாள் ஒன்றும், செந்நிற, கருநிற மட்பாண்டங்களும் கிடைத்துள்ளன. கோடைக்கானலைச் சுற்றிக் காணத் தகுந்த பல இடங்கள் உள்ளன. நகரைச் சுற்றி அமைந்துள்ள மூன்று நீர் வீழ்ச்சிகள் குறிப்பிடத்தக்கவை ; கண்கவரும் வனப்புடையவை. இவைகளை யடைதற்கு நல்ல வழிகளும் அமைந்துள்ளன. லா மலைத் தொடரில் (Law's ghat) வெள்ளி வீழ்ச்சி (Silver 'cascade) அமைந்துள்ளது. இது பரப்பாறு என்னும் அருவியால் உண்டாகிறது. கிளென் வீழ்ச்சி (Glan falls) யானது வில்பட்டிக்கு வடக்கில் செல்லும் சிறு பாதையருகில் அமைந்துள்ளது. இதுவும் பரப்பாற்றின் ஒரு பிரிவினாலேயே உண்டாக்கப்படுகிறது. கோடைக்கானலின் தென்மேற்கில் பாம்பாற்றினால் மோகினி வீழ்ச்சி (Fairy Falls) உண்டாக்கப்படுகிறது. கோக்கர்ஸ் நடைவெளி (Coaker's walk) யானது, கோடைக் கானலின் எல்லையில், பழனி மலையின் தென்பக்கச் சரிவின் உச்சியில் அமைந்துள்ளது. (லெஃப்டினெண்ட் கோக்கர் என்பவர் ஓர் சிறந்த பொறியியல் வல்லுநர். இவர் கி. பி. 1870 முதல் 1872 வரை மதுரை மாவட்டத்தில் பணியாற்றி வந்தார். கி. பி. 1870-ஆம் ஆண்டு கோடைக்கானலின் படத்தை (Map) வரைந்து வெளி யிட்டவர் இவரே). இந் நடை வெளியிலிருந்து காண் போருக்குச் சமவெளியில் அமைந்துள்ள ஊர்கள் அழகோடு காட்சியளிக்கின்றன. வானம் நிர்மலமாக இருக்கும் நாட்களில் 47 கல் தொலைவில் அமைந்துள்ள மதுரை நகரம் கூடத் தென்படுவதாகக் கூறுகிறார்கள்,