பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

256

பார். முதன் முதலில் தலைமைப் படகோட்டியாகப் பணியாற்றியவன் பெயர் 'மைகேல்' என்பதாகும். படகுகள் தேவைப்படும்போது, பிரயாணிகள் கரையில் நின்று கொண்டு மைகேல்' என்று கத்துவர். அதனால் எல்லாப் படகோட்டிகளும் 'மைகேல்' என்ற பெய ராலேயே அழைக்கப்பட்டனர்.

கோடைக்கானல் ஏரி, காதலர்களின் கூட்டுறவுக்கு மிகவும் ஏற்ற இடமாகக் கருதப்படுகிறது. தனிமையை விரும்பும் ஐரோப்பியக் காதலர்கள் இணை இணையாகப் படகூர்ந்து பொழுதைக் கழிப்பர், ஐரோப்பியக் காதலர்களைப் பற்றிய நகைச் சுவையான செய்திகள் பல இங்குக் கூறப்படுகின்றன. கோடைக்கானலுக்குப் புதிதாக ஒரு பிராடெஸ்டண்டுப் பாதிரி வந்திருந்தார். அவர் இளைஞர். அழகிய தோற்றமும், எடுப்பான உடற்கட்டும் உடையவர். அவ்வூரில் வாழ்ந்த செல்வக் குடும்பத்தைச் சார்ந்த அழகிய நங்கை ஒருத்தியுடன் சில காலம் நெருங்கிப் பழகி வந்தார். அவளைத் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்ற ஆசை அவருள்ளத்தில் ஏற்பட்டது. தம் உள்ளக் கருத்தை அவ்வழகிக்குக் கூற நினைத்த அவர், படகில் உலவிவர அழைத்தார். அப்போது அவரைப் பின்புறமிருந்து ஒரு நண்டு கவ்வியது. வலி பொறுக்க முடியாத அவர் மல்லாந்த வண்ணம் வீழ்ந்தார். அப்பெண் அக் காட்சியைக் கண்டு வயிறு குலுங்கச் சிரித்தாள். அவமானம் தாங்க முடியாத அப் பாதிரியார் எழுந்து விரைவாக வீடு சென்று விட்டார். பிறகு அப் பெண்ணிடம் தம் கருத்தைக் கூற அவர் மனம் ஏனோ துணியவில்லை! பாவம் ! காதலில் அவருக்கு ஏற்பட்ட தோல்வி இரங்கத்தக்கது. ஆனால் கோடைக் கானல் ஏரியில் தொடங்கிய எல்லாக் காதலும் இப்படி முடியவில்லை. பல, 'இன்பியல்' முடிவுகளைப் பெற்று வெற்றிகரமாக முடிந்தன.