பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7

மெய்ஞ்ஞான இலக்கியங்கள்' என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கை நடத்தியபோது வேறொரு புதுச் சிந்தனை என்னைப் பலமாக ஆட்கொண்டது.

பிற சமயப் புலவர்களெல்லாம் வழிவழியாகத் தமிழில் வழங்கி வரும் இலக்கிய வடிவங்களில் மட்டுமே தமிழ் இலக்கியப் படைப்புகளை உருவாக்கித் தந்து சென்றுள்ளனர். ஆனால், முஸ்லிம் தமிழ்ப் புலவர்களோ வழக்கமான எல்லாவித இலக்கிய வடிவங்களிலும் இலக்கியம் படைத்ததோடு அமையாது, மசலா, கிஸ்ஸா, நாமா, முனாஜாத்து போன்ற பெர்சிய, அராபிய மொழி இலக்கிய வடிவங்களோடு தமிழுக்கென்றே படைப்போர், நொண்டி நாடகம் , திருமண வாழ்த்து எனப் புத்தம் புதிய இலக்கிய வடிவங்களையும் படைத்தளித்துச் சென்றுள்ளனர் என்ற செய்தி இன்றைய இளந்தலைமுறைக்கு மட்டுமல்ல, பிற சமயப் புலமையாளர்களுக்கும் ஒரு புதுச் செய்தியாக இருந்தது. எனவே, 1983ஆம் ஆண்டில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் டாக்டர் வ.அய். சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் 'தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்' என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கை நடத்தினேன் மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் டாக்டர் தமிழண்ணல், டாக்டர் விஜய வேணுகோபால் டாக்டர் அஜ்மல்கான் போன்ற பேராசிரியர்கள் கலந்து கொண்டபோதிலும் எதிர் பார்த்த அளவுக்கு விஷய கனமுள்ள கருத்தரங்காக அஃது அமையவில்லை. ஓரிருவரைத் தவிர மற்றவர்கள் ஆய்வுக் கட்டுரை எழுதாமலே வந்துகலந்துகொண்டனர். காரணம், அவர்கட்குப் போதிய அளவு நூல்களோ அது தொடர்பான செய்திகளோ கிடைக்காததுதான். எனவே, எல்லோரும் பொதுவாக இஸ்லாமிய இலக்கியங்களைப் பற்றியே பேச வேண்டியதாயிற்று.

என்னைப் பொறுத்தவரையில், இந்தக் கருத்தரங்கு ஒரு முக்கியமான விஷயத்தைத் பளிச்செனக் கோடிட்டுக்காட்டி-