பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/635

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இலட்சுமணசாமி

631

உமாமகேஸ்வரம்


இலட்சுமணசாமி முதலியார் இவரை டாக்டர் ஏ.எல்.முதலியார் என்று எவரும் புகழ்வர். இவர் சென்னைப் பல்கலைக்கழகத்துத் துணைவேந்தர். இவர் இந்தியாவின் ஒப்புயர்வற்ற அறிஞர் பெருமக்களில் ஒருவர். இவரது அரிய முயற்சியினால் சென்னைப் பல்கலைக் கழகம் பல துறையில் முன்னேறி நூற்றாண்டு விழாவினைச் சிறப்புறக் கொண்டாடிப் பெரும்பு புகழுடன் திகழ்கிறது. இவரது பேச்சாற்றல் உலக முழுமையும் பரவியுள்ளது தமிழ் மொழிக்கும் தமிழ் அறிஞர்க்கும் பெருந்துணையாய் இருந்து ஆக்கம் தேடுபவர். மருத்துவத்துறையிலும் ஒப்புயர்வற்றவர். இவர் பெற்றுள்ள பட்டங்கள் மிகப் பல. காலம். கி. பி. 20 ஆம் நூற்றாண்டு.

திரு. ஏ.எல்.முதலியாரின் தமையனாரான டாக்டர் ஏ. ராமசாமி முதலியார் அவரும் பேசுந்திறன் படைத்தவர். திருவிதாங்கூரில் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்து வருகிறார். இவரும் உலகப்புகழ் வாய்ந்த பேச்சாளர். கடல் கடந்து சென்று தம் அரிய கருத்துக்களைப் பேச்சின் மூலம் வெளியிட்டவர். ஆகவே, ராமசாமி முதலியாரும், லட்சுமணசாமி முதலியாரும் இராம இலக்குமணர்களாகவே இருந்து வருபவர்கள். இருவரும் வைஷ்ணவ மரபினர். அக்காலத்தில் "பாண்டியில் இருவர் பட்டரில் இருவர்" என்றும் திகழ்ந்ததை அறிந்தோம். இதுபோது இவ்விருவர்களும் "சென்னையில் இருவர்" என்று கூறத்தக்க மாட்சியுடையவர்.

உமாமகேஸ்வரம் பிள்ளை இவர் தஞ்சையில் வாழ்ந்த பிரபல வழக்கறிஞர். சிறந்த சைவப் பற்றுடையவர். பி.ஏ.பி.எல். பட்டம் பெற்றவர். தஞ்சையில் உள்ள கருந்தட்டான் குடி என்னும் கரந்தையில் ஒரு தமிழ்ச் சங்கம் நிறுவித் தமிழ் வளர்ச்சிக்காகப் பாடுபட்டவர். தமிழ்ப் பூம்பொழில் என்னும் பத்திரிகையை நடத்தியவர். கி.பி. 20 ஆம் நூற்றாண்டு.