பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/518

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

502

மக்சீம் கார்க்கி


சிறிது நேரத்தில் பல யுவதிகளும் இளைஞர்களும் அவர்களைச் சூழ்ந்துகொண்டு சரமாரியாகக் கேள்வி கேட்கத் தொடங்கினார்கள். அவர்களது பரபரப்பு, சுற்றுச் சூழ நின்ற மற்ற மனிதர்களைக் கவர்ந்திழுக்க தாயும் சிஸோவும் நின்றார்கள். தண்டனையைப்பற்றியும், கைதிகள் எப்படியெப்படி நடந்துகொண்டார்கள் என்பதைப்பற்றியும், யார் யார் பேசினார்கள், என்ன பேசினார்கள் என்பதைப் பற்றியும் அந்த வாலிபர்கள் கேட்கத் தொடங்கிவிட்டார்கள். அவர்களது கேள்விகளிலெல்லாம் ஒரு ஆர்வம் நிறைந்த குறுகுறுப்பு நிறைந்திருந்தது. அந்த நேர்மையையும் ஆர்வத்தையும் கண்டு அவர்களது ஆசையை நிறைவேற்றி வைக்க வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டது.

“இதோ இவள்தான் பாவெல் விலாசவின் தாய்” என்று யாரோ சொன்னார்கள்; உடனே எல்லோரும் அமைதியானார்கள்.

“நான் உங்கள் கையைப்பிடித்துக் குலுக்கலாமா?”

யாரோ ஒருவனின் பலத்த கை தாயின் விரல்களைப் பற்றிப் பிடித்துக் குலுக்கியது. யாரோ ஒருவனின் உத்வேகமான குரல் ஒலித்தது.

“உங்கள் மகன் எங்கள் அனைவருக்கும் தைரியம் ஊட்டும் சிறந்த உதாரணமாய் விளங்குவான்...”

“ருஷ்யத் தொழிலாளர்கள் நீடூழி வாழ்க” என்று ஒரு உரத்த குரல் ஒலித்தது.

அந்தக் கோஷக்குரல்கள் பற்பலவாகி, இங்குமங்கும் எங்கும் ஒலிக்கத் தொடங்கின. ஜனங்கள் நாலாதிசைகளிலுமிருந்து ஓடிவந்து தாயையும் சிஸோவையும் சூழ்ந்துகொண்டார்கள். போலீஸ்காரர்களின் விசில் சப்தங்கள் கீச்சிட்டு அலறின. எனினும் அந்தச் கீச்சுக் குரலால் இந்தக் கோஷ வெள்ளத்தை அமுங்கடிக்க முடியவில்லை. சிஸோவ் சிரித்தான். தாய்க்கு இதெல்லாம் ஒரு ஆனந்தமயமான கனவு போலிருந்ததது. அவள் புன்னகை செய்தவாறே தலை குனிந்தாள்; ஜனங்களோடு கை குலுக்கினாள். ஆனந்த பரவசத்தால் எழுந்த கண்ணீரால் அவளது தொண்டையும் அடைபட்டுத் திணறியது. அவளது கால்கள் களைப்பினால் உழன்று தடுமாறின. எனினும் அவள் இதயத்தில் ஏதோ ஒரு பிரகாசமான ஏரியின் பிரதிபலிப்பைப்போல் எண்ணங்கள் பொழிந்து வழிந்தன.

அவளருகிலே நின்றுகொண்டிருந்த யாரோ ஒருவன் தெளிவாக

உணர்ச்சி வசப்பட்டு நடுநடுங்கும் குரலில் பேசத் தொடங்கினான்.