பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அவையறிதல்

189



‘கண்’ என்று பொதுவாகக் கூறியிருப்பதால், தம்முடைய கண், பிறருடைய கண் இரண்டனையும் குறிக்கும். நுண்ணறிவு பெற்ற ஒருவர், மற்றொரு நுண்ணறிவு பெற்றவர் நம் கருத்தை அறிந்து கொள்ளப் பயன்படுவது கண்ணே என்றும் பொருள் கொள்ளலாம். சொல், செயல் முதலியவற்றால் கருத்தை மறைக்க இயலும். ஆனால், கண் என்னும் அளவு கோல் கருத்தை அறிந்து கொள்ளுவதில் சிறிதும் தவறாது. இச்செயல் அறிஞரால்தான் இயலும் என்பதையும் வள்ளுவர் குறிப்பதைக் கூர்ந்து நோக்க வேண்டும். 710

72. அவையறிதல்


1.அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகைஅறிந்த தூய்மை யவர்.

சொற்களின் வகைகள் பலவும் அறிந்த துய்மையினையுடைய அமைச்சர், அரசர்மாட்டு இருக்கும் சபையாரின் மரபினை அறிந்து, அவ்விடம் சொல்லத் தகுவனவற்றை ஆராய்ந்து பார்த்துச் சொல்லுதல் வேண்டும்.

அவை-அரசரைச் சார்ந்த அறிஞர்களும் பெரியோர்களும் குழுமியிருக்கும் இடம், அரசசபை; சொல்லின் தொகை-சொற்களின் வகைகள். அஃதாவது செஞ்சொல், இலக்கணைச் சொல், குறிப்புச் சொல், முதலியன பலவும் அடங்கிய சொற்குழு; தூய்மையவர்-இங்கே இச்சொல் குற்றமற்ற உள்ளம் வாய்ந்த மந்திரிகளைக் குறிக்கும். 711

2.இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
நடைதெரிந்த நன்மை யவர்.

வெளிப்படைச் சொல், குறிப்புச் சொல் முதலிய பல வகைச் சொற்களின் ஒழுங்கினை ஆராய்ந்து அறிந்த நன்மையினை உடையவர், தாம் ஒன்றைச் சொல்லத் தொடங்கு முன், அந்தச் சபையின் தன்மையினை எண்ணிப் பார்த்துக் குற்றம் நேரா வண்ணம் ஆராய்ந்து சொல்லுதல் வேண்டும்.

இடைதெரிதல்-இடம், காலம் முதலியன அறிதல்; சொல்லின் நடைதெரிதல்-இன்ன சொல் இன்ன இடத்துக்கு ஏற்ற சொல் என்பதை அறிதல். 712