பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

246

திருக்குறள்



வரைவின் மகளிர்-பொது மகளிர்; வரைவு-அளவு; உரிய கணவன் இவன் என்னும் வரையறையின்றிப் பொருள் கொடுப்போர் எவராய் இருப்பினும் அவருக்கு மனைவி போன்று இருந்து இன்பம் தருதலால 'வரைவின் மகளிர்’ என்பது வழக்கு. 911

2.பயன்துாக்கிப் பண்புரைக்கும் பண்பில் மகளிர்
நயன்துாக்கி நள்ளா விடல்.

தமக்குக் கிடைக்கக் கூடிய பயனை அளந்து பார்த்து அதற்கு ஏற்றவாறு இனிய சொற்களைச் சொல்லும் பண்பற்ற மகளிரது அன்பினை ஆராய்ந்து பார்த்து அவர்களை விரும்பாமல் இருத்தல் வேண்டும்.

தூக்குதல்-ஆய்ந்து பார்த்தல், அளந்து பார்த்தல்; பண்பு ரைத்தல்-இன்சொல் கூறல்; பண்பில் மகளிர்-நற்குணமில்லாத பொருட் பெண்டிர்; நயன்-நன்மை, விருப்பம்; அன்பு: நள்ளல்-விரும்புதல். 912

3.பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணம்தழீஇ யற்று.

இருட்டறையில் பொருள் தருவாரை விரும்பாமல் பொருளை மட்டும் விரும்பும் பொது மகளிரது பொய்யாகத் தழுவி மகிழும் இன்பம், பிணம் எடுப்பார் பொருள் பெறும் பொருட்டு முன்பின் அறியாத பிணத்தினை இருட்டறையில் தழுவியெடுத்தாற் போன்றதே ஆகும்.

பொருட் பெண்டிர்-பொருளுக்காகவே மனைவியைப் போல் நடிக்கும் பொது மகளிர்; முயக்கம்-தழுவி மகிழும் சிற்றின்பம்; ஏதில் பிணம்-முன் பின் அறியாத அயலார் பிணம்; தழீ இயற்று-தழுவுதல் போன்றது.

பொய்மையுடைய பொருட்பெண்டிரைக் கூடிப் பெறும் இன்பம் இருட்டறையில் முன்பின் அறியாத பிணத்தினைத் தழுவிப் பெறும் இன்பம் போன்றதாம் என்றும் பொருள் கூறலாம். 913

4.பொருட்பொருளாளர் புன்னலம் தோயார் அருட்பொருள்
ஆயும் அறிவி னவர்.