பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

268 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


திருவாசகத்தில் 172ஆம் பாடலிலும் பேசப் பெற்றிருப்பதைக் காணலாம்.

ஒளி உடைய ஒன்றை அது எங்கே இருந்தாலும் எளிதாகக் காணமுடியுமே! அவ்வாறிருக்க இந்தப் பொங்கு பாதத்தைச் செங்கணவன் சென்றும், இடந்தும்கூடக் காணமுடியாமல் போனது விந்தையே என்ற குறிப்புப் பொருள் சிந்திக்கத் தக்கது ஆகும்.

செங்கணவனே தேடிக் காண முடியாத பாதம் என்று அதன் சிறப்பை இவ்வளவு விரிவாகக் கூறியது ஒரு கருத்தை உட்கொண்டதாகும். செங்கண்ணனுக்குத் தன்னை மறைத்துக்கொண்ட அப்பாதம், சராசரி மனிதர்கள் நடமாடும் இந்தப் பூதலத்தில் வந்தது. அவ்வாறு வருதற்கு, இப்பூதலம் தன் முயற்சியால் தவம் ஏதொன்றும் செய்யவில்லை. அப்படி இருந்தும், அப்பாதம் பூதலத்தே போந்தது என்றால், பூதலத்தின் தகுதிநோக்கி அன்று; தன் அருள் காரணமாகவே இவண் போந்தது என்கிறார் அடிகளார்.

அருள் காரணமாக இப்பூதலத்து வந்த அத்திருவடி, என் பிறப்பைமட்டுமா அறுத்தது? அத்திருவடியைக் காணும் பேறுபெற்றோர் அனைவரது பிறப்பையும் அறுத்தது என்பதை விளக்க 'எங்கள் பிறப்பறுத்திட்டு’ என்று தன்மைப் பன்மையாகக் கூறினார். அடுத்தபடியாக 'எம் தரமும் ஆட்கொண்டு' என்று பேசுகிறார். இவை முன்னும் பின்னுமாகக் கூறப்பெற்றிருப்பினும் ஆட்கொண்டு என்பதை முன்னரும்’ பிறப்பு அறுத்திட்டு என்பதைப் பின்னரும் வைத்துப் பொருள் கொள்ள வேண்டும்.

பல்வேறு தரமுடைய மக்களை ஒரே நிலைப்படுத்திப் பிறப்பை அறுப்பது எப்படி முடியும்? மக்கள், உடம்பு உடையவர்களேனும் பல்வேறு மனநிலையில் உள்ளவர்கள்