பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

278 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


சொல்லைப் பயன்படுத்துகிறார் என்பதைப் பின்வரும் திருவாசகத் தொடர்களும் வலியுறுத்தும்.

வான்பழித்து இம் மண் புகுந்து மனிதரை
ஆட்கொண்ட வள்ளல்

(திருவாச:351)

தானே வந்து எனது உள்ளம் புகுந்து
அடியேற்கு அருள் செய்தான்

(திருவாச:555)

புகுதல் என்று கூறினாலே, அதன் எதிர்மறையான வெளிவருதல் என்ற சொல்லை அது நினைவூட்டும். ‘புக்கு' என்ற சொல் இருந்து என்ற பொருளைத் தருவதாயினும் சொல்லளவில் புக்கு என்பது வெளிப்படுதல் என்னும் சொல்லுக்கு எதிர்ச்சொல் ஆதலின், இதில் குழப்பம் நேராதிருக்க 'மன்னும்' (நிலை பெறுதல்) என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார்.

180.
கேட்டாயோ தோழி கிறி செய்த ஆறு ஒருவன்
தீட்டு ஆர் மதில் புடைசூழ் தென்னன் பெருந்துறையான்
காட்டாதன எல்லாம் காட்டிச் சிவம் காட்டித்
தாள்தாமரை காட்டித் தன் கருணைத் தேன் காட்டி
நாட்டார் நகை செய்ய நாம் மேலை வீடு எய்த
ஆள்தான் கொண்டு ஆண்டவா பாடுதும் காண் அம்மானாய் 6

கிறி-மாயம். தீட்டு ஆர் மதில்-சுதை தீட்டப்பெற்ற மதில். காட்டாதன-காட்டத்தகாதனவாகிய உண்மை ஞானங்கள்.

இப்பாடலின் உயிர்நாடி 'நாட்டார் நகைசெய்ய நாம் மேலை வீடெய்த' என்ற தொடராகும். இரண்டு செயல்கள் உடனிகழ்ச்சிகளாக இங்கு பேசப்பெற்றுள்ளன. வீடு எய்துதற்குரிய வழிகளைக் குருநாதர் கையாண்டார். அதனால் விளையும் பயனைக் காணவோ அறியவோ