பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பின்னுரை * 369



அடிகளார் பாடலில் 'யான் உன்னை ஏத்தினும்’ என்ற தொடரில் ‘யான்’ இருத்தலால், ஏத்துதல் பயனற்றதாகிவிடுகிறது. வேறு வகையாகக் கூறுமிடத்து அந்த ஏத்துதலே பயனற்ற சொற் கூட்டமாக அமைந்து விடுகிறது. பயனில்லாத சொற்களைக் கூறுதல் பிழை. ஆதலின், 'ஏத்தினும் என் பிழைக்கே இரங்கி' என்றார்.

இவ்வாறு இல்லாமல், வேறு ஒருவகையாகவும் பொருள்கொள்ளலாம். எல்லை கடந்து நிற்கும் ஒருவனுடைய புகழை ஏத்திக் கூறத்தொடங்கும்பொழுது நம்மையும் அறியாமல் ஒரு பிழை நேர்ந்துவிடுகிறது. புகழ்ந்துகொண்டே செல்லும்பொழுது அப்புகழுக்கு ஒர் எல்லை வகுத்துவிட்டதாக மனத்திடை ஒர் எண்ணம் தோன்றக்கூடும். சாதாரண மனிதர்களைப் பொறுத்தமட்டில் அவர்கள் புகழுக்கு ஒர் எல்லை உண்டு. ஆதலின், இவ்வாறு கூறுவதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால், எல்லையற்ற புகழுடைய ஒருவனைப் புகழத் தொடங்கி, ஒர் எல்லைக்கு வந்துவிட்டோம் என்று நினைத்தால், அது பெருந்தவறாகும். இறைவனை ஏத்துதலாகிய நற்செயலே ஒரு பிழைக்குக் காரணமாகி விடுகிறது.

இந்த உண்மையைத் திருமுருகாற்றுப்படை நன்கு விளக்குகிறது. முருகப் பெருமானைத் தேடிச் செல்கின்ற பக்தன் ஒருவன், இறுதியில் அவன் இருக்கும் இடத்தைக் கண்டதாக அவனை ஏத்தத் தொடங்குகிறான்.

'மலைமகள் மகனே! மாற்றோர் கூற்றே!’ என்ற முறையில் ஏத்தத் தொடங்கி, அவன் புகழைச் சொல்லிக் கொண்டே வந்தான். திடீரென்று அந்தப் பக்தனின் மனத்தில் ஒர் எண்ணம் தோன்றிற்று. என்னுடைய அறியாமை இருந்தவாறு என்னே! எத்தனை பிறவிகள் எடுத்தாலும், அத்தனை பிறவிகளிலும் தொடர்ந்து அவனுடைய புகழைக் கூறிக்கொண்டு வந்தாலும் அது கூறிமுடிந்ததாக ஆகாதே என்று உணர்ந்தான். ஏத்தலில்