பக்கம்:பாரதிதாசன் கவிதைகள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63. சிறுத்தையே வெளியில் வா! பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு திறக்கப் பட்டது! சிறுத்தையே வெளியில்வா! எலிஎன உன்னை இகழ்ந்தவர் நடுங்கப் புலிஎனச் செயல்செய்யப் புறப்படு வெளியில்! நம்பினை பகலினை நள்ளிருள் என்றே சிம்புட் பறவையே! சிறகை விரி, எழு! சிங்க இளைஞனே திருப்புமுகம்! திறவிழி! இங்குன் நாட்டுக் கிழிகழுதை ஆட்சியா? கைவிரித் துவந்த கயவர் நம்மிடைப் பொய்வி ரித்துநம் புலன்கள் மறைத்துத் தமிழுக்கு விலங்கிட்டுத் தாயகம் பற்றி நமக்குள உரிமை தமக்கென் பார்எனில், வழிவழி வந்தஉன் மறத்தனம் எங்கே? மொழிப்பற் றெங்கே? விழிப்புற் றெழுக! இகழ்ச்சி நேர்ந்தால் இறப்போம் என்றும் புகழ்ச்சி யேஎம் பூணாம் என்றும் வையம் ஆண்ட வண்டமிழ் மரபே! கையி ருப்பைக் காட்ட எழுந்திரு! குறிக்கும் உன் இளைஞர் கூட்டம் எங்கே? மறிக்கொணாக் கடல்போல் மாப்பகை மேல்விடு! நன்மொழிக்கு விடுதலை நல்கிட எழுந்திரு! பொன்மொ ழிக்குநீ புதுமை ஏற்றுவாய்! மக்களை ஒன்றுசேர்! வாழ்வை யுயர்த்துக! கைக்குள் திறமை காட்ட எழுந்திரு! வாழ்க இளைஞனே, வாழ்க நின்கூட்டம்! வாழ்க திராவிட நாடு! வாழ்க நின்வையத்து மாப்புகழ் நன்றே!