பக்கம்:புது மெருகு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

புது மெருகு

னுடைய அவையில் அரங்கேற்றும் பேறு எனக்கு இருந்தது. என் பெயர் மாகீர்த்தி என்பது தங்கள் நூலினால்தான் பொருளுடையதாயிற்று. இனி ஆசிரியர் தொல்காப்பியர் என்றே தங்களை உலகம் வழங்கும்." என்று வாழ்த்திப் பரிசில்களை அளித்தான்.

அன்று முதல் திருணதூமாக்கினி,ஆசிரியர் தொல்காப்பியர் ஆனார்.

இந்த அரங்கேற்றம் நிறைவேறின போது தொல்காப்பியத்திற்கு ஒரு புலவர் சிறப்புப் பாயிரம் பாடினார். அதன் பிற்பகுதி வருமாறு:

"நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து
அறங்கரை நாவில் நான்மறை முற்றிய
அதங்கோட் டாசாற்கு அரில்தபத் தெரிந்து
மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி
மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த
தொல்காப் பியன்எனத் தன்பெயர் தோற்றிப்
பல்புகழ் நிறுத்த படிமை யோனே."

[மாற்றாரது நிலத்தைக் கொள்ளும் போர்த் திருவினையுடைய பாண்டியன் மாகீர்த்தி அவையின்கண்ணே, அறமே கூறும் நாவினையுடைய நான்கு வேதத்தினையும் முற்ற அறிந்த, அதங்கோடென்கிற ஊரின் ஆசிரியனுக்குக் குற்றமற ஆராய்ந்து கூறி, எழுத்து, சொல், பொருள் என்னும் மூவகை இலக்கணமும் மயங்கா முறையால் செய்கின்றமையால் எழுத்திலக்கணத்தை முன்னர்க் காட்டி, கடல் சூழ்ந்த உலகின்கண்ணே ஐந்திர வியாகரணத்தை நிறைய அறிந்த பழைய காப்பியக் குடியிலுள்ளோனெனத் தன் பெயரை மாயாமல் நிறுத்தி, பல புகழ்களையும் இவ்வுலகின்கண்ணே மாயாமல் நிறுத்திய தவவேடத்தை உடையோன்.

—நச்சினார்க்கினியர் உரை.]
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/19&oldid=1548529" இலிருந்து மீள்விக்கப்பட்டது