பக்கம்:புது மெருகு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யமன் வாயில் மண்

35

தால் நான் பெரும் பேறு பெற்றவனாவேன்" என்ற நயஞ் செறிந்த வார்த்தைகள் சோழனிடமிருந்து வந்தன.

"மறப்பதா? எப்படி முடியும்? முதல் முதலாகப் பரிசு பெற்ற இந்த இடத்தை மறந்தால் என்னிலும் பாவி ஒருவனும் இருக்க முடியாது. எனக்குத் தாயகம் இது" என்று கூறிப் புறப்பட்டான் புலவன்.

2

சோழ நாட்டின் மற்றொரு பகுதிக்கு உறையூர் தலைநகரம். அங்கிருந்து ஆண்டு வந்தான் நெடுங்கிள்ளி. நலங்கிள்ளியின் குணச்சிறப்பு அவ்வளவும் அவனிடம் இல்லை. ஆயினும் பழங்குடியிற் பிறந்து பயின்ற பெருமையால் பல நல்லியல்புகள் அவனிடம் அமைந்திருந்தன.

இளந்தத்தன் நலங்கிள்ளியிடம் பெற்ற வரிசையுடன் புறப்பட்டான். உறையூர் சென்று நெடுங்கிள்ளியையும் பார்த்துப் பிறகு மற்ற நாடுகளுக்குப் போகலாம் என்று எண்ணினான். 'இனி நமக்கு எங்கும் சிறப்பு உண்டாகும்' என்ற உறுதியான நம்பிக்கையோடு அவன் நெடுங்கிள்ளியின் ராஜ்யத்தில் புகுந்து உறையூரை அடைந்தான்.

'நெடுங்கிள்ளியின்மேல் படையெடுப்பதற்காகச் சோழன் நலங்கிள்ளி படைகளைக் கூட்டுகிறான்' என்ற செய்தி அப்போது நாட்டில் உலவியது. அதனால் நெடுங்கிள்ளியும் தன் நாட்டுப் படைவீரர்களை நகரத்தில் கூட்டிவைத்திருந்தான். போருக்கு ஆயுத்தமாக அவ்வீரர்கள் இருந்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/40&oldid=1548638" இலிருந்து மீள்விக்கப்பட்டது