பக்கம்:மயில்விழி மான்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

மயில்விழி மான்

பேதைப் பெண் அதை உண்மை என்று நம்பி அக்கினித் திராவகப் புட்டியை வாயண்டை கொண்டுபோய் விட்டாள். நமச்சிவாயம் சட்டென்று அவள் கையிலிருந்த திராவகப் புட்டியைத் தட்டிவிட்டான். புட்டி தூர விழுந்தது என்றாலும் அதிலிருந்து சில துளிகள் அவள் முகத்தில் சிந்தி விட்டன. அவள் நினைவிழந்து விழுந்து விட்டாள். பிறகு நடந்தது ஒன்றும் அவளுக்குத் தெரியாது. இவையுங் கூட வெகு நாளைக்குப் பிறகு தான் ஒவ்வொன்றாக அவள் நினைவுக்கு வந்தன. நமச்சிவாயம் செத்து விட்டான் என்று சொன்னதை அவள் நம்பி விட்டாள். பட்டாசுக்கட்டுப் பெட்டிகள் வெடித்து வீடு எரிந்ததில் அவன் இறந்ததாக நான் சொன்னது கொஞ்சம் அவளுக்கு ஆறுதலாய் இருந்தது. இல்லாவிடில் அவனை இவளே கொன்றுவிட்டதாக எண்ணி மறுபடியும் பிராணத்தியாகம் செய்ய முயன்றிருப்பாள். இப்போது நமச்சிவாயம் உயிரோடிருப்பதைப் பற்றி நான் சொன்னதும் உடனே புறப்பட்டு என்னோடு வந்து விட்டாள். இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு இருவரையும் சேர்த்து வைத்துவிட்டு வந்தேன். 'பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ?' என்று கம்பர் சொன்ன பிரகாரம் அவர்கள் இருவரும் ஆனந்தக் கடலில் மூழ்கித் திளைத்திருப்பதைப் பார்த்துவிட்டு வந்தேன்!" என்று சொன்னார் கந்தப்பப் பிள்ளை.

"அப்படியானால், நமச்சிவாயம் இந்தக் கண்டத்துக்கும் பிழைத்துக் கொள்வான் என்று சொல்லுங்கள்!" என்றேன்.