பக்கம்:மயில்விழி மான்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மயில்விழி மான்

11

2

வாயிலும் மூக்கிலும் உப்பு ஜலம் ஏறி மூச்சுத் திணறுவது போன்ற உணர்ச்சியுடன் சுய நினைவு பெற்றேன். பொல்லாத உயிர் என் உடம்பை விட்டுப் போய் விடவில்லை. இந்திய சர்க்காரிடம் பெற்ற உதவி தொகைக்கு ஈடாக ஏதேனும் நான் ஆராய்ச்சி செய்து என் கடனைக் கழித்தே ஆகவேண்டும் அல்லவா? அதற்காகவே பிழைத்தேன் போலும்! வாயில் புகுந்திருந்த உப்பு ஜலத்தைத் துப்பிக் கொண்டு எழுந்து நின்றபோது கடலோரத்தில் இடுப்பளவு ஜலத்தில் நிற்கக் கண்டேன். பெரிய அலை ஒன்று என்னை மோதி அடித்துக் கொண்டு சென்றது. அலை போன பிறகு பார்த்தால் ஈர மண்ணில் தரையில் கிடந்தேன். சட்டென்று எழுந்து இன்னும் கொஞ்சம் கரையை நோக்கிச் சென்றேன். அங்கிருந்த ஒரு மலைப் பாறை மீது தாவி ஏறிக் கொண்டேன். பிறகு நாலா புறமும் பார்த்தேன். அதிர்ஷ்டம் என்று சொல்வதா, கடவுளின் கருணை என்று சொல்வதா என்று தெரியாமல் திகைத்தேன். பஸிபிக் சமுத்திரத்தின் மத்தியில் ஆங்காங்கு இருப்பதாகக் கேள்விப்பட்டிருந்தேனே, அந்தத் தீவுக்கூட்டங்களில் ஒன்றில் நான் இருப்பதாக அறிந்து கொண்டேன். ஒரு தீவின் கரையில் நான் ஒதுங்கியிருந்தேன். சுமார் ஒரு மைல் தூரத்துக்கு அப்பால் இன்னொரு தீவு தெரிந்தது. அதற்கு அப்பால் கொஞ்ச தூரத்தில் இன்னொரு தீவு காணப்பட்டது.