உள்ளடக்கத்துக்குச் செல்

வைணவ புராணங்கள்/வைணவ புராண இலக்கியம்

விக்கிமூலம் இலிருந்து




3. வைணவ புராண இலக்கியம்


ஆறாம் நூற்றாண்டு தொடங்கித் தமிழ் மொழியில் திருமாலையே பரம்பொருளாகக் கொண்டு போற்றும் நூல்கள் எழத் தலைப்பட்டன. இக்காலப் பகுதியில் முதல் ஆழ்வார் மூவர் பாடிய மூன்று அந்தாதிகளும் தோன்ற, தொடர்ந்து 9-ஆம் நூற்றாண்டு வரையில் பல ஆழ்வார் பாசுரங்கள் தோன்றின; 9-ஆம் நூற்றாண்டில் தோன்றிய நம்மாழ்வாரின் பாசுரங்கள் தோன்றி தமிழில் வைணவ நெறியைத் தனிப்பெரு நெறியாக அமைத்தன. அந்த நூற்றாண்டில் பிறந்த நாதமுனிகள் தொடங்கி 1137-ல் பரமபதித்த இராமாநுசர் வரையில் வைணவ ஆசாரிய பரம்பரை பிறந்து வளர்ந்தது. இந்த வைணவ நெறி ஆழ்வார் பாசுரங்களைப்போல் தமிழில் கால் கொள்ளாமல் வடமொழியையே அடிப்படையாக வைத்து நூல் செய்தது; தமிழும் வடமொழியும் கலந்த மணிப்பிரவாளம் [1] என்ற புதிய உரைநடையை சமய வியாக்கியான நூல்களுக்காகப் பயன்படுத்திக் கொண்டது. இந்த நிலை ஓரளவுக்கு 16-ஆம் நூற்றாண்டு வரையில் தொடர்ந்து வந்தது.

9, 16-ஆம் நூற்றாண்டுகட்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நூல் எழுதிய வைணவப் பெரியோர் சிறந்த தமிழ்ப் புலமை பெற்றிருந்தபோதிலும், சாத்திர வியாக்கியானம், மணிப்பிரவாள உரைநடை நூல்கள் மட்டுமே எழுதினர். இலக்கியத் துறையைக் கண்ணெடுத்தும் நோக்கவில்லை. இக்கருத்துக்கு விலக்காக வேதாந்த தேசிகர் தமிழிலும், வடமொழியிலும் சிறு தோத்திர சாத்திர நூல்கள் பல செய்தார். மணவாள மாமுனிகள் தமிழில் சில தோத்திர நூல்களைச் செய்தார்.

16-ஆம் நூற்றாண்டுக்கு முந்திய நூற்றாண்டுகளில் சைவ சமயத்தில் எழுந்த சமய இலக்கிய வெள்ளம் எல்லோரையும் சமய நெறியில் ஈடுபடுத்தியது. இக்காலத்தில் எழுந்த சமயப் பேரிலக்கியங்கள் கந்த புராணம், உபதேச காண்டங்கள், திருவாதவூரடிகள் புராணம், அருணகிரிநாதர் முருகன் புகழ் பாக்கள் என்பன. இவற்றால் எழுந்த அலைகள் கரைகடந்து மோதியபோது, அம்மோதல் வைணவரையும் தாக்கியது. விழித்துக்கொண்டவர்களில் பெரும் புலவர் பலரும் தோன்றினர். இவர்கள் எக்காலத்திலும் இல்லாதவாறு வைணவச் சார்பாகப் பெரு நூல்கள் செய்தார்கள். அவை

1. ஸ்ரீ பாகவத புராணம் அல்லது இதிகாச பாகவதம்

2. மகாபாகவதம் அல்லது புராண பாகவதம்

3. திருக்குருகை மான்மியம்

4. கூடற்புராணம்

5. இருசமய விளக்கம்

முதல் இரண்டும் இதிகாசம் (பாகவதம்), 3-வது தல புராணம்; 5-வது சமய விசாரமாகவுள்ளது. இனி, இவை ஒவ்வொன்றையும் விரிவாக ஆராய்வோம்.


  1. 1 இதனைச் சைனர் கண்டு தம் சமய நூல்களை இந்நடையில் அமைத்தனர்.