வைணவ புராணங்கள்/(4) கூடற்புராணம்

விக்கிமூலம் இலிருந்து

எத்தனையோ பெயர் விளக்கமில்லாத பல சிறு தலங்கள் ஆழ்வார் பதிகங்கள் பெற்றிருக்க சிறப்பான தலைநகரிலுள்ள இத்தலம் எந்தப் பதிகமும் பெறாதது வியப்பே. மதுரை மீனாட்சி சோமசுந்தரக் கடவுள் கோயிலுக்கு அன்று முதல் இன்று வரை இருந்து வருகின்ற பெருஞ் சிறப்பால் இது புறக்கணிக்கப் பெற்றது போலும். எனினும் பண்டைத் தமிழ் நூல்களில் இருந்தை, இருந்தையூர், இருந்தவளமுடையார் என்று சிறப்பிப்பது இத்தலத்தையும் இங்கு எழுந்தருளியுள்ள திருமாலையுமே என்று பேராசிரியர் மு. இராகவையங்கார் விளக்குவார்.’[1]

ஆசிரியர்: இந்நூலாசிரியரைக் குறித்து யாதும் தெரியவில்லை. ஆயினும் இந்நூலே இவருடைய பெருஞ்சிறப்பை நன்கு உணர்த்தும், நூல் முழுதும் இவர்தம் சொந்தப் படைப்பாகும். பெரியாழ்வார் மதுரைக்குப் போந்தமையும் பாண்டியன் கொண்டாட வந்த கிழியறுத்தலையும் கூறுகின்றன. இறுதி இரு சருக்கங்களால் இதனை நன்கு தெளியலாம்.

இவர் வடமொழியிலும் தமிழிலும் புலமை மிக்கவர் என்பதை நூலால் நன்கு அறியலாம். வேத வேதாகமங்களில் மிக்க மதிப்பும் ஈடுபாடும் கொண்டவர். வைகானசம், பாஞ்சராத்ரம் என்ற இரு வைணவ ஆகமப் பிரிவுகளைப் போற்றியே எழுதுவது இவர்தம் பரந்த மனப்பான்மைக்கு எடுத்துக்காட்டு. அன்றியும் இவர் திருமாலடிக்கே பேரன்பு பூண்டொழுகும் பரம வைணவர். இவர் உளமுருகப் பாடிய பாடல்கள் ஆங்காங்கு எடுத்துக்காட்டப்பெற்றுள்ளன. ஆழ்வார்களையும் அவர்தம் பிரபந்தங்களையும் இவர் பெரிதும் போற்றியுரைப்பது இயல்பேயாகும்.இராமாநுசரிடம் இவருக்கு ஈடுபாடு மிகுதி என்பதைச் சொல்ல வேண்டுவதில்லை.

இருப்பினும், பிற மத நிந்தை இவரிடம் எப்போதும் தலைகாட்டுவதில்லை. இவர் பாடிய இடங்களும் பல. இரண்டொன்றை ஈண்டு எடுத்துக் காட்டலாம். நூலின் முதற் செய்யுளே சிறப்புமிக்கது.


  1. 28 ஆராய்ச்சித் தொகுதி (1938 பக்.242 காண்க. மேலும் விளக்கம் வேண்டுவோர் இந்நூலாசிரியரின் பாண்டிநாட்டுத் திருப்பதிகள் (கழகம், 4வது கட்டுரை - மதுரைக் கூடலழகர் (பக்.53-69) கண்டு தெளியலாம்.
78

பொன்பூத்த புரிசடையும்
பூண்மணிப்பொன் நீண்முடியும்
மின்பூத்த ஒருபாலும்
திருமார்பும் வெண்ணீறும்
மன்பூத்த மான்பதமும்
மானிடமும் வளையுமணிந்து
அன்பூற்றி உலகங்களிக்கு
அவரேஎம் வினைதவிர்ப்பார்.

என்பது காண்க. இங்கு ஆசிரியர் சங்கர நாராயண வடிவத்தைப் பேசுவது காணத்தக்கது.பின்னும்'ஆற்றுப் படலத்தில் முதற் பாடலில் நீலமிடற்றினரைக் குறிப்பிடுகின்றார். முதல் பாடலில் கோவிந்தன் தனைக் கூடலழகனை நாவின்பம் பெற நாம் பாடுதுமரோ என்று கூறிவிட்டு அடுத்த பாடலில் நீலமிடற்றினரைப் பாடுகின்றார். ஒன்பதாம் பாடலில் கூறுகின்றார்.

கண்ணன் கீர்த்தியும்
கண்ணுதல் கீர்த்தியும்
விண்ணின் மீனமும்
தேவரும் மேதினிக்
கெண்ண ரெண்ணும் என்
றிட்ட வரைகள் போல்
தண்ணெ னும்மலைத்
தாமரைகள் வீடுமால்.

பெரியாழ்வார் வரலாற்றை இரண்டு பாடல்களால் பாடிய ஆசிரியர் பின்னும் பல இடங்களில் தமக்கு அவரிடமுள்ள ஈடுபாட்டைப் புலப்படுத்திக்கொண்டே செல்கின்றார். இவர் புலமை மிக்கவர். சந்தப் பாடல்கள் பாடுவதிலும் யமகம், திரிபு பாடுதலிலும் வல்லவர். சித்திர கவிகள் யாழ் முதலியவற்றைக் குறிப்பிடுவார்.

ஆசிரியர் வாழ்ந்த காலம் பக்தி மிகுந்த காலம். கால உணர்வு இல்லாத காலம். இன்றும்கூட அறிஞர்களிடையே வரலாற்றுணர்வு காணப்படுகின்றதில்லையல்லவா? இறுதியில் இவர் பாடுவது:

பதின்மர் பாடலுக்குமுன்
பதிக மாகவே
புதுவை யாசிரியனார்
புகல்பல் லாண்டுதான்
மதுரைமா நகர்தனிற்
பிறந்த வாய்மையால்
இதனை நேர்தவம்
நிலத்து இயம்ப வல்லமோ?

காலம்: ஆசிரியரைக் குறித்த செய்திகள் கூறப் பெறாமை போலவே காலத்தைப் பற்றிய குறிப்போ, சிறப்புப் பாயிரமோ, அரங்கேற்றிய காலமோ சொல்லப் பெறவில்லை. இவர் ஆழ்வார் அனைவரையும் கூறுவதாலும், ஆசாரியருள் எம்பெருமானார் காலமாகிய 12-ஆம் நூற்றாண்டின் பிற்பாதிக்கும் பிற்பட்டவர் என்பது தெளிவு.

புராணத் திருமலை நாதர் மதுரையிலிருந்தே (கி.பி.1508), ஒரளவு அவரையும் புராணம் பாடியதையும் நேரில் அறிந்திருந்ததாலுமே கூடற்புராணத்தைத் தாம் முற்கூறியவாறு பாடினார் என்பது திரு. மு. அருணாசலம் அவர்களின் கருத்து. மேலும் இருவருக்கும் கால இடையீடு அதிகம் இருக்க முடியாது என்றும், சுமார் 50 அல்லது 75 ஆண்டுகளே இருந்திருக்கலாம் என்றும் அவர் கருதுவர். எனவே கூடற்புராணம் பாடிய காலம் 1575-1600க்குள் இருந்திருக்கும் என்று உறுதிப்படுத்துவர்.

16-ஆம் நூற்றாண்டு சைவத்திலும் வைணவத்திலும் புராணங்கள் மிக அதிகமாகத் தோன்றிய காலம். பொருளால் மட்டுமின்றி புராணத்தின் நடையாலும் இது பிந்திய நூலாக முடியாது. இந்த நூற்றாண்டுக்கே உரியதென்று கருதத் தோன்றுகின்றது.

நூற்பொருள்: இப்புராணம் பாயிரப் பகுதி, கிருத காண்டம், ரேத காண்டம், துவாபர காண்டம், கலி காண்டம் என்ற ஐந்து பகுதிகளாக உள்ளது. பிந்தைய நான்கும் யுகங்களின் பெயர்கள். பாடல் 757 பாயிரப் பகுதியுள் கடவுள் வணக்கம், புராண வரலாறு, ஆற்றுப் படலம்,நாட்டுப் படலம், நகரப்படலம் என்ற பிரிவுகள் உள்ளன. 

கடவுள் வணக்கப் பகுதியுள் திருமாலன்றி சேனைத் தலைவர், பெரிய திருவடி (கருடன்), சிறிய திருவடி (அநுமன்), ஐம்படைகள், பரமபாகவதர் வணங்கி, பெரியாழ்வாருக்கும் கோதைப் பிராட்டிக்கும் வணக்கம் கூறப்பெற்றுள்ளது. அதன்பின் ஆசிரியப் புத்தூரான் பல்லாண்டு பாடவந்த மல்லாண்ட தோழன் அடிபணிந்து தலத்துத் தாயாராகிய மதுரை வல்லி பதமும், நாவின் கிழத்தியும், பத்து அவதாரங்களும் வணங்கி பன்னிரு ஆழ்வார்களையும் வணங்குகின்றார். அதன் பின்னர் எம்பெருமானாரை வணங்கி, அண்டகோளத்தார் என்னும் பாடலைக் குறிப்பிட்டு பதின்மர் பாடலைத் தரித்தவருடைய தாளைப் போற்றுகின்றார்.

அண்ட கோளத் தார்என்னும்
ஆரியத் தமிழ்என் றிங்கு
தண்டமிழ்ச் சங்கம் வென்ற
சடகோபர் தாமே சிற்பங்
கண்டதோர் வடிவாற் பேசத்
திரைப்புறத் திருந்த காலத்
துண்டெனப் பதின்மர் பாட
லுத்தரித் தவர்தாள் போற்றி

'அண்டகோளத்தார் என்னும் ஆரியத்தமிழ் என்று இங்குக் குறிப்பிட்டது பதினேழு அடிகொண்ட ஒர் ஆசிரியப்பா. இப்பாடலை மதுரைச் சங்கத்தாருக்கு நம்மாழ்வார் அனுப்பி பொருள் காணச் சொன்னார் என்றும், அவர்கள் பொருள் காணமாட்டாது விழித்தார்கள் என்றும் ஒரு கதை எழுந்தது. அக்கதையையே இப்பாடல் காட்டுகின்றது.

அவையடக்கம் 4 பாடல்களைக் கொண்டது. இங்கு மீண்டும் பெரியாழ்வார் பாசுரத்தைக் குறிப்பிடுவது காணத்தக்கது. பின்வரும் 'புராண வரலாறு’ என்ற பகுதியில் 16 பாடல்கள் அடக்கம். இது நூலுக்குப் பதிகமாக அமைந்தது. ஒரு பாடலில் இப்புராணம் பிரம்மாண்ட புராணத்துள் 'கேத்திர மான்மிய காண்டத்தில் 82-93 கதைகளாக 12 அத்தியாயங்கள் உள்ளன என்கின்றார். 

அடுத்தது ஆற்றுப்படலம். இந்நூல் சிறந்த காப்பியமாக ஆசிரியர் கருதிப் பாடினார் என்பதை உணர்த்தும் திரிபு, யமகமாக 20 பாடல்கட்கு மேல் இங்கு உள்ளன. எடுத்துக்காட்டாகச் சில காட்டுவோம்.

ஆகமாக வளாகங் கலக்குமே
யாகமாக வளாகங் கலக்குமே
நாக நாகமை நாகம் புரையுமே
நாக நாகமை நாகம் புரையுமே

காலை யேநிகர் போவதும் காலையே
மாலை யேஎன நாறலு மாலையே
சேலை யேறலை விந்தைதன் சேலையே
பாலை யேய்வன பாலை வனபாலையே.

ஆறு என்பது இங்கு வையை இது வேகவதி, வையை, கிருதமாலை எனும் பெயர்களைப் பெற்றது என்று ஆசிரியர் காட்டுவார்.

வேக மாதலில் வேக வதியென்றும்
மாகம் வாய்ந்தத னால்வையை என்றும்தார்
ஆக லாற்கிருத மாலை யாம்ன்ன்றும்
நாகர் முப்பெயர் நாட்டும் நதியரோ.

என்பது பாடல்.

அடுத்தது நாட்டுப் படலம். உம்பர்கோன் வாழி என்று உழவர் செந்நெல் வித்துகின்றனர். பயிர், தருமம், பாத்திரம் அறிந்து செய்தவர் குலம் தழைப்பதுபோல் கிளை தோன்றுகின்றது. நெற்களங்கள், பண்டு நான்முகன் பரப்பிய தளிகை யோதனங்கள் போல் விளங்குகின்றன. இப்பகுதியில் தமிழ் இலக்கணச் செய்திகள் பலவும், கருத்துகள் பலவும் நுவலப்பெற்றுள்ளன.

அடுத்தது நகரப் படலம். இங்கும் பெருங்காப்பியம் போலவே சொல் தொடையும் பொருள் தொடையும் அமைய ஆசிரியர் பாடுகின்றார். நாக பாயலைப் போன்றது கூடல் மாநகரம். ஒரு சந்தப் பாடல்

தஞ்சையும் உறந்தையும்
கடங்கடற் கலிங்கமும்
வஞ்சியும் குடக்கொடே
வடக்குமவந் தெதிர்ப்பினும்
விஞ்சு காலி னாலுடைந்த
பஞ்சுபோலும் வெள்கணை
அஞ்சினா லுடைந்தபேதை
நெஞ்சுபோலு மாகுமே.

என்பது. பாஞ்சராத்திரியரைச் சொல்லி அடுத்த பாடலில்'கிழியறுத்த பட்டனார் குலத்துலோர்வைகானசர் வழிவழி தொடர்ச்சியாக வாழும் வீதி' என்கின்றார். பாடல்களின் வகையும், கழங்கு அம்மானைப் பந்தடியும்;

ஒருமுறை கேட்ட பாட்டும்
எழுத்தொளித் தோது பாட்டும்
பொருள்நிலை கரந்த பாட்டும்
கணக்குமைந் தங்கப் போக்கும்
வருபல வினாவும் கூறி
மன்னரார் புகழும் வாணர்
தெரிவையர் கழங்கம் மானை
பந்தடித் தொகையும் தேர்வாம்.

புலவோர் பூவாளத்தாற் பள்ளியுணர்த்துகிறார்கள். மக்கள் உண்ணிர் வம்மென்றெறி மணியொற்றி உணவூட்டுகிறார்கள்.

முதலாவது கிருத காண்டம். நைமிச முனிவர்கள் 'மதுரை மான்மியம்' கூறு என்று வியாழனை வினவுகிறார்கள். 'புலன்கள் அயல் போக்காது எண்ணி எழுதும் ஒவியம் போல் இருந்து கேண்மின்' என்று அவன் கூறுகின்றான்.இங்கு பல இடங்களில் சொல்லமைப்பும், வாக்கிய அமைப்பும் வடமொழியமைப்பாக இருப்பதைக் காணலாம். எடுத்துக்காட்டு: 'நும்மால் நன்றாய்க் கேட்கப்பட்டேன் நான்; நோன்பாற்றும் உம்மால் இந்நூலை கேட்பதனுக்குண்டதிகாரம்'.இங்கு இயற்கை வருணனை அதிகம். தென்றலானது குருகையின் மாறற்கு ஆம் இது எனும்படி குளிர்கின்றது. பாண்டி நாட்டில் இந்நகரில் ஈசனுக்கும் இமய மகளுக்கும் தாம் மணம் முடிப்பதற்காக வந்த செய்தியைத் திருமால் உணர்த்துகின்றார். திருமணம் நிகழ்கின்றது. காசியன் சக்கர தீர்த்தக் கரையில் தவம் புரிகின்றான். நான்கு பாடல்களில் துதிக்கின்றான்.

பேரா யிரமோ பிரமமோ எவ்வெவைக்கும்
வேராய காரணமோ மேனித் தனிப்பொருளோ
பாரா யணமறைகள் பார்த்துணரும் தொல்லுருவோ
நாரா யணவோ நமோநமோஉன் னடிக்கே.

என்பது ஒரு பாடல். பின்னும் பல பாடல்கள் சமயப் பொருள்களை நுவல்கின்றன. காசிபனுக்கு மக்களும் அவர்களுக்கு எவ்வகையிலும் அலைவின்மையும் திருமால் அருளுகின்றார்.

இரண்டாவது திரேத காண்டம். பிருது சக்கரவர்த்தி பூசித்து வரம் பெறுகின்றான். அடுத்த'காலநேமி வதைப் படலத்தில், திருமால் அந்த அசுரனைத் தொலைத்த செய்தியைக் கூறும்போது சிறு போர் வருணனையும் காண்கின்றோம்.

மூன்றாவது துவாபர காண்டத்தில், முதலில்’அத்திரிப் படலம்'; அதில் யானை மலைக் கதை. இம்மலையில் உரோமச முனிவன் முன் தோன்றிய நரசிங்கத்தின் உக்கிரம் தணியாமையால், தேவர் சரப மூர்த்தியை ஏவி உக்கிரம் தணிக்குமாறு செய்ய, நரசிங்கம் சரபத்தை வென்று பின் தானே சாந்தமடைந்தது. அடுத்தது'அம்பரிடப் படலம்; அம்பரீடன் மதுராபுரியில் வந்து திருமாலைப் பணிந்து முக்தி பெறுகிறான். இங்கு அவன் கண்ட நகர வருணனை 18 பாடல்கள்; புனல் விளையாட்டு 45 பாடல்கள்.

நான்காவது கலி காண்டம், முதலாவது 'உருவசி சாப நீங்கு படலம்'. தேவ சபையில் உருவசி சாபம்பெற்றுப் பூவுலகடைந்து புரூரவனை மணந்து வாழ்ந்து பின் சாபம் நீங்கித் தேவருலகடைதல். இரண்டாவது மலையத்துவசன் தவம் செய்து தடாதகைப் பிராட்டியைப் பெண்ணாகப் பெறுதல். பின் தடாகை அரசாள, மலையத்துவசன் முக்தி பெறுதல். மூன்றாவது சீவல்லப பாண்டியன் ஆட்சியால், செல்வ நம்பியைப் பீடத்திருத்தி, பொற்கிழி தூக்கி, பெரும் பொருள் தத்துவத்தை உணர்ந்து வருபவருக்குக் கிழி வழங்குதல் எனத் திட்டமிடுதல். சீவில்லிபுத்தூர் பட்டாசாரியன் விண்டுசித்தன் மெய்ப்பொருள் உணர்தல் வேண்டி மதுரைக்கு வருதல். அந்த பட்டாசாரியன் மதுரையடைந்து பல்லாண்டு பாடி மெய்ப்பொருள் நிறுவிப் பொற்கிழி பெறுதல்’[1], பல்லாண்டு கூறுமிடத்து, நூலாசிரியர் பட்டர்பிரான் கூற்றாக மூன்று பல்லாண்டு பாடல்களைப் பாடியுள்ளார். பின்வரும்,

பல்லாண் டிலங்கு மணத்திண்தோள்
மாயா, தூய பரமேட்டி
தொல்லாண் டிருந்த குடியடியோம்
உன்னோடு யாமும், தொழுதொழும்பும்,
எல்லாந் தருமுன் திருவடிகள்
இரண்டும், பண்டை எமதுணர்வும்,
பல்லாண் டுழி பல்லாண்டு
பலகால் நூறா யிடத்தாண்டே

என்ற பாடல் அவற்றுள் ஒன்றாகும்.


  1. 29 இந்த வரலாறு பெரியாழ்வார் வாழ்க்கையில் மாறி வழங்குகின்றது. இறையருளால் பாண்டித்தியம் பெற்று திருமாலே பரம்பொருள் என்றுநிறுவி பொற்கிழி பெறுகின்றார். அரசன் அவரைப்பட்டத்து யானையின் மீது ஏற்றி நகரத்தில் பவனி வரச் செய்து பாராட்டை வழங்குகின்றான்.இக்காட்சியைக் காண்பதற்காகத் திருமால் கருடன் மீதேறி பெரிய பிராட்டியுடன் காட்சி தருகின்றார். இக்காட்சியைக் கண்ணுறும் மக்களில் சிலர் கண்ணெச்சில் படும் என்று பல்லாண்டு பாடியதாக (ஒரு பதிகம்) வரலாறு