சீனத்தின் குரல்/தளபதியின் ஓட்டம்

விக்கிமூலம் இலிருந்து

தளபதியின் ஓட்டம்

சியாங்-கெ-ஷேக் எப்படியாகிலும் கம்யூனிஸ்டுகளை, நாட்டை விட்டு ஓட்டினாலன்றி சீனத்தில் அமைதி நிலவ முடியாதென்று நினைக்கின்றார். இந்த அவருடைய எண்ணத்தில் நாட்டின் முன்னேற்றம் முதலிடம் பெறவில்லை. தன் கட்சியான கொமிங்டாங் கட்சி ஓங்கி வளர வேண்டுமென்பதும் நாடு அடையப்போகும் நலனுக்கு தன் பெயர் அடிபட வேண்டும் என்பதே அவருடைய முழு நோக்கமாகக் காணப்படுகிறது. உள்ளும் வெளியுமாக இரண்டுவித நோக்கங்களை வைத்துக்கொண்டிருந்த காரணத்தால் ஜப்பானியர்களை விட மிக மோசமான எதிரிகள் கம்யூனிஸ்டுகள்தாம் என்ற முடிவுக்கு அவர் வரவேண்டியிருந்தது. மேலும் அங்கு அன்றிருந்த கம்யூனிஸ்டுகளின் போக்கும் அவ்வண்ணமிருந்தது போலும், ஆகவே அவர் கொண்டிருந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ள முடியாமல் முரட்டுப் பிடிவாதக்காரராய் விட்டார். அதுவே அவருடைய வீழ்ச்சிக்கும் காரணமாகிறது.

தன்னுடைய இராணுவம் முழுவதையும் திரட்டி வடபகுதிக்கு அனுப்புகிறார். அப்படி இவரால் வட பகுதிக்கு அனுப்பப்பட்டப் படைகளுக்கு படு தோல்வி என்று அடிக்கடி செய்திகள் வந்தும், எப்படியாகிலும் வடகோடிக்கப்பால் கம்யூனிஸ்டுகளை விரட்டி விட்டுத்தான் திரும்பவேண்டும் என்று படைத் தலைவர்களுக்கு கண்டிப்பான உத்திரவு போட்டு விடுகின்றார் சியாங் கே-ஷேக்.

இந்த நிலையில் கம்யூனிஸ்டுகளுக்கு இரண்டு தொல்லைகள். ஒன்று :- சியாங் அனுப்பிய படைகள் மூலம், மற்றொன்று :- ஜப்பானியர்களால். இந்த இரண்டு படைகளை எதிர்க்க வேண்டிய சூழ்நிலையில் அகப்பட்டுக்கொண்ட கம்யூனிஸ்டுகள் ஒரு முடிவுக்கு வந்தார்கள். அதாவது :--

ஜப்பானியர்களை எதிர்த்துத் தோற்கடித்தால் நாட்டின் பொது எதிரியை தோற்கடித்த நல்ல பெயர் தங்களுக்குக் கிடைக்குமென்று நினைத்தார்கள்.

அடுத்து - சியாங்-கே-ஷேக்கைத் தோற்கடித்தால் அவனுடைய சர்வாதிகாரத்தை ஒழித்து நாட்டில் நல்லாட்சி நிறுவலாம் என்பது மற்றோர் எண்ணம்.

இந்த எண்ணத்தின் அடிப்படையில் ஏற்பட்ட போராட்டம் தொடர்ந்து நடப்பதைப்பற்றி சியாங் - கின் தளபதிகள் யோசிக்கத் தொடங்கினார்கள். நாம் கம்யூனிஸ்டுகளோடு போராடுவது நியாயந்தானா, ஒருகால் சியாங்கின் மனதில் ஏதாவது கெட்ட எண்ணம் குடிகொண்டிருக்குமோ, பொது எதிரி ஜப்பான் நாட்டை நாசமாக்கிக் கொண்டிருக்கும், போது உள்நாட்டு கட்சியின் மேல் சியாங் ஆத்திரம். கொள்வானேன். முதலில் விரட்ட வேண்டியவன் ஜப்பான்காரனா, கம்யூனிஸ்டா என்பதை மிகத் தீவிரமாக சிந்தித்தார்கள். அந்த சிந்தனையில் முதன்மையானவர் சாங்-சியூ-லியாங் என்பவர். கம்யூனிஸ்டு கட்சியின் வரலாற்றையும், பழையகால வேலை முறைகளையும் ஆழ்ந்து யோசித்தார். அதற்காக கம்யூனிஸ்டு தலைவர்களையும் சந்தித்துப் பேசினார்.

இந்த நிலமைகளுக்குப் பிறகு சியாங்கின் தளபதிகள் அனைவரும் ஒன்றுகூடி ஒரு பயங்கரமான முடிவுக்கு வந்தார்கள். அந்த முடிவுதான் தங்கள் தலைவனாகிய சியாங்கைக் கைது செய்வது என்பது. சியாங்கை உள்ளே தள்ளிவிட்டால் நாட்டின் நிலமை சரிபடலாம் என்று நினைத்தார்கள். அவனை வெளியே விட்டுவைத்திருக்கும்வரை ஒருவித தெளிவும் ஏற்படப்போவதில்லையென உறுதியாக நம்பினார்கள். கைதுசெய்து விடுவதென்று ஒருமுகமாக எல்லா தளபதிகளும் 1936-ம் ஆண்டு டிசம்பர் திங்கள் 11-ம் நாள் முடிவுக்கு வந்துவிட்டார்கள்.