சொன்னால் நம்பமாட்டீர்கள்/தேசபக்தி

விக்கிமூலம் இலிருந்து
தேசபக்தி

நான் தேவகோட்டை நகரத்தார் உயர்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்துக் கொண்டிருக்கும்போது கமலா நேரு அம்மையார் இறந்து போனார்கள். அதற்கு விடுமுறைவிட வேண்டுமென்று தலைமையாசிரியரிடம் கேட்டுக் கொண்டேன். அவர் ஒரேயடியாக முடியாது என்று மறுத்து விட்டார். வேறு வழியில்லாமல் ஹர்த்தால் செய்வதென்று முடிவு செய்து மாணவர்களை ஒன்று திரட்டி ஊர்வலமாகக் கூட்டிக் கொண்டுபோய் விட்டேன்.

தலைமையாசிரியர் மிகுந்த கோபம் கொண்டு என்னை பள்ளியிலிருந்து டிஸ்மிஸ் செய்து விட்டார். நான் அவரிடம் நேரில் சென்று “தேச பக்தியாக இருப்பது குற்றமா” என்றேன். “ஹர்த்தால் செய்வது பெருங்குற்றம். ஆயினும் நீ செகரட்ரிக்கு உறவினனாக இருப்பதால் மன்னிப்பு எழுதிக் கொடு, உன்னை மீண்டும் பள்ளியில் சேர்த்துக் கொள்ளுகிறேன்” என்றார்.

“நான் செய்தது குற்றமில்லை. நாட்டின் தலைவி இறந்ததற்குக்கூட பள்ளிக்கூடம் விடுமுறை விடாததுதான் குற்றம். ஆகவே நீங்கள்தான் தவறை உணரவேண்டும். நான் மன்னிப்புக் கேட்க மாட்டேன்” என்றேன்.

“நீ வெளியே போ” என்று கூச்சல் போட்டார். “நான் இப்போது வெளியே போகிறேன். ஆனால் நீங்கள் இந்தப் பள்ளியை விட்டு வெளியே போகும் காலம் விரைவில் வரும்” என்று கூறிவிட்டுச் சென்றேன்.

பிறகு இரண்டு மாத காலம், மாணவர்கள் தொடர்ந்து ஹர்த்தால் செய்ததால் நிர்வாகம் ஸ்தம்பித்தது.

தலைமை ஆசிரியர் ராஜினாமா செய்துவிட்டு பள்ளியை விட்டு வெளியே போய்விட்டார். எனது பள்ளிப் படிப்பும் அத்துடன் முடிந்தது. பின்னர் ஒரு சமயம் ஒரு மாநாடு சம்பந்தமாக நான் திருச்சிக்குப் போயிருந்தபோது மேற்படி தலைமை ஆசிரியரைச் சந்திக்க நேர்ந்தது.

“என்ன படிக்கிறாய்?” என்று கேட்டார். “தங்கள் புண்ணியத்தினால் என் பள்ளிப் படிப்புத்தான் முடிந்து விட்டதே?” என்றேன்.

“உன் புண்ணியத்தினால் என் வேலையும் போய் விட்டதல்லவா?” என்றார். இருவரும் வாய்விட்டுச் சிரித்தோம்.

“என் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டுத்தான் போகவேண்டும். நாம் இருவரும் இனி நண்பர்களாக இருப்போம்” என்றார்.

சரி என்று அவர் வீட்டுக்குச் சென்றேன். அன்பாக உபசாரம் செய்து விருந்தளித்தார். சாப்பிட்டு முடிந்ததும் ஒரு சிறு பெண் குழந்தையைத் தூக்கிக் கொண்டு வந்தார்.

“இது யார் சார்?” என்றேன். “என் பேத்தி” என்று சொல்லிவிட்டு “இவள் பெயர் என்ன தெரியுமா? கமலா” என்றார். நான் வியப்பால் அவரையே நோக்கினேன். அவர் சொன்னார், கமலாநேரு இறந்த அன்று இவள் பிறந்தாள். அதனால் இவளுக்குப் பேர் கமலா என்று வைத்தேன். தேச பக்தி என்பது உனக்கு மட்டும்தான் சொந்தமா?” என்று கேட்டார்.

‘உங்கள் தேச பக்திக்கு தலை வணங்குகிறேன்,’ என்று சொல்லிவிட்டு விடைபெற்றுக் கொண்டேன்.