பக்கம்:அண்ணா காவியம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சிலம்புச் செல்வர் ம. பொ. சிவஞானம்
அவர்களின் செங்கோல் 20.10.74

தமிழகத்தின் சமுதாய வாழ்விலே பகுத்தறிவுச் சுடர் கொளுத்தித், தமிழ் மொழியின் வரலாற்றிலே புது ஏட்டைப் படைத்து, அரசியலிலே சனநாயகத்திற்குப் புத்துயிர் தந்து, ஏழைகளின் துயர் துடைக்கத் தம்பிய ருடன் அரியணையேறி, அங்கு அவர்களைத் தங்க வைத்துத் தாம் அமரராகி விட்டார் அண்ணா.

அவரது வாழ்க்கை வரலாறு உண்மையிலேயே ஒரு காப்பியத்துக்குரியது. அண்ணாவின் தம்பியருள் ஒருவ ரான கவிஞர் எஸ். கருணானந்தம் அவர்கள் 'அண்ணா காவியம்' என்னும் இந்தக் கவிதை நூலைப் படைத் துள்ளார்.

காப்பியத்துக்குப் பாயிரம் தேவை. அந்த நூல் மரபைக் கடைப்பிடித்து இந்தக் காப்பியத்தின் தலைவரான அண்ணா மீதே கவிஞர் பாடியுள்ள பாயிரம் சுவையானது.

அண்ணா பிறந்தது முதல் அவர் அமரரானது வரை வாழ்க்கை வரலாறு முழுவதும் இந்நூலில் விரித்துரைக்கப் படுகிறது. வேற்றுச் சொல் இல்லாமல், வெட்டி வருனனையும் இல்லாமல், பகுத்தறிவாளர் ஏற்கும் வகையில் காப்பியம் படைத்த கவிஞரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

கவிஞர், தாம் அண்ணாவிடம் வைத்துள்ள பற்றுதலை -ஏன் பக்தியைக்-கவிதை தோறும் காண்கிறோம்.

கவிஞர் ஆனந்தம் பிறர் பார்வையில் படாமல் மறைந்து வாழும் இயல்புடையவர். அண்ணாவிடம் கொண்ட பக்தி காரணமாகத்தான் இந்நூலின் மூலம் வெளிப்பட்டுள்ளார். . -

காப்பிய நாயகனின் வரலாற்று நிகழ்ச்சிகளைக் கூறுமிடத்து, அவருடைய அடக்கம், அன்பு, பண்பு ஆகியவற்றைப் படம் பிடித்துக் காட்டுகின்றார். -

அண்ணா புற்றுநோய்க்கு ஆளான பின்னர் வரும் கவிதைகளிலே, கவிஞர் ஆனந்தம் தமது எழுதுகோலைத் துயரத்திலே தோய்த்து எழுதுகிறார். அண்ணாவின் முடிவைக் கூறும் கவிதையும் அவ்வாறே.

மொத்தத்தில் அண்ணா காவியம் தமிழ்க் களஞ்சி யத்தில் நிலைத்திருக்கக் கூடிய இலக்கியச் செல்வம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/11&oldid=1077997" இலிருந்து மீள்விக்கப்பட்டது