பக்கம்:அறிவுக்கு உணவு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

அறிவுக்கு உணவு



பழகுதல்

ஒருவர் உடல்போல மற்றவர் உடல் இல்லை. ஒருவர் முகம்போல மற்றவர் முகம் அமைவதில்லை. அப்படியே ஒருவர் அறிவும் குணமும் மற்றவர் அறிவிற்கும் குணத்திற்கும். மாறுபட்டேயிருக்கும். இவ்வுண்மையைப் பிறரோடு பழகத் தொடங்குமுன்னே ஒவ்வொருவரும் அறிந்து கொள்ளவேண்டும். இன்றேல், பழகும் பழக்கம் வெற்றி பெறாது.

செல்வமும் வறுமையும்

மகிழ்ச்சியால் வந்த சிரிப்பு மணிக்கணக்கில் நிலைக்குமா? நிலைத்தாலும், ஆத்திரத்தால் வந்த துடிப்பு ஐந்து நிமிடமாவது நிலைக்குமா? இவ்விரண்டும் நிலைத்து நின்றாலும் தீயோர்க்குச் செல்வத்தால் வந்த வாழ்வும், நல்லோர்க்கு வறுமையால் வந்த தாழ்வும் நிலைத்து நில்லா.

எப்போது?

கல்வி கல்லாதிருப்பது நல்லது! எப்போது? -கற்றும் அறிவில்லாதபோது.

எதுவும் எழுதாதிருப்பது நல்லது! எப்போது? -எழுதியும் எழுதியபடி ஒழுக இயலாதபோது,

ஒன்றும் பேசாமலிருப்பது நல்லது! எப்போது? -பேசியும் நடக்க இயலாதபோது.

சுதந்திரம் பெறாதிருப்பது நல்லது! எப்போது? -பெற்றும் வாழ முயலாதபோது.

பகுத்தறிவுள்ள மக்களுக்கு

எறும்பின் சுறுசுறுப்பும், எருதின் உழைப்பும்,
நரியின் தந்திரமும், நாயின் விசுவாசமும்,
கழுதையின் பொறுமையும், காகத்தின் கூட்டுறவும்
புலியின் வீரமும், புறாவின் ஒழுக்கமும்,
சிங்கத்தின் நடையும், யானையின் அறிவும்,
மானின் வாழ்வும், மக்களுக்குத் தேவை.