பக்கம்:இதன் விலை ரூபாய் மூவாயிரம், அண்ணாதுரை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14


குணங்களும் கொண்டவர். இவரே நமது முதலமைச்சர் என்று சொன்னாலொழிய, யாராலும், அவ்வளவு பெரிய பதவியில் அமர்ந்திருப்பவர் என்று கண்டதும் உணரக்கூடிய விதமான உருவமோ, உடையோ,நடையோ கொண்டவரல்ல, தன்னடக்கமுள்ள தமிழர், ஓமந்தூரார்.

தென் ஆற்காடு மாவட்டத்திலே, மிகச்சிறிய கிராமம், ஓமந்தூர். கிராமத்தைத் தொட்டும் தொடாமலும் இருக்கும் சிறியதோர் வயல் சூழ்ந்த தோட்டம், பயன் தரும் மரவகைகள், பச்சைப் பயிர் வகை, பழம் தரும் செடிகள் படரும் கொடிகள், இவைகளுக்கிடையே ஓர் வீடு—அதிலே பன்னெடுங்காலம் தங்கி, சந்தடி, ஆர்ப்பாட்டம், இவைகளைக் கேட்கவும் காணவும் அவசியமில்லாத இடத்தில் வாழ்ந்து, தூய்மையையும், வாய்மையும் உள்ளத்தில் பயிரிட்டுக்கொண்டிருந்தவர், ஓமந்தூரார். அவருக்கு ஆறு குமாரர்கள். அவர்களுக்கு இன்னின்ன வேலை தேடிக்கொடுத்தார். மருமகனை மைசூர் சமஸ்தானத்திலே பெரிய வேலையில் அமர்த்தினார். மைத்துனனுக்கு மைக்கா சுரங்க உரிமையைத் தந்தார். சம்பந்தி வீட்டாருக்குச் சர்க்கார் காரியாலயத்திலே வேலை தேடிக்கொடுத்தார் என்று வதந்திகள் கூறுவதற்குரிய நிலையும் நடவடிக்கையுமே சர்வசாதாரணமாக நாடாளும் வாய்ப்புப் பெற்றவர்களிலே பெரும்பாலோருக்கு இருக்கும். ஓமந்தூரார், இத்தகைய சூழ்நிலையில் சிக்கினவருமல்ல. முரட்டுச் சுபாவம், வாக்குத் தருவதில் வல்லுனர், நோக்கத்தை மறைப்பதில் நிபுணர் என்றெல்லாம் பழித்துப் பேசப்படுபவர், பல அரசியல் தலைவர்கள்—ஆனால், பகைவனும் இவர்மீது இப்படிப் பழி சுமத்த முடியாது. காங்கிரஸ் தியாகத்தீயிலே விழமறுத்துவிட்டு, வெள்ளை ஆட்சியின் போது, சுயநல வேட்டையில் ஈடுபட்டுக்கொண்டிருந்துவிட்டு, சமயம் கிடைத்த உடனே, பதவிக்காகப் பல்லிளித்த பலர் போலின்றி, காங்கிரசின் தொண்டராக இருந்து, தியாகத் தீயிலேயே குளித்து வெளிவந்தவர். அவர் அமெரிக்கா சென்றதில்லை, ஆங்கில நூல் நிலையங்களில் ஆண்டுகளை செலவிட்டதில்லை, அதிகாரிகளுடன் நிலாச்சோறு உண்டுகொண்டிருந்ததில்லை, கட்டை வெட்டும் கந்தன், மாடோட்டும் முனியன்,