பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



முன்னுரை


சொல்லென்னும் பூம்போது தோற்றிப் பொருளென்னும்
நல்லிரும் தீந்தாது நாறுதலால்- மல்லிகையின்
வண்தார் கமழ்தாமம் அன்றே மலையாத
தண்தாரான் கூடல் தமிழ்
.’[1]

என, நல்லிசைப்புலவர் பொய்யா மொழிக்கு இலக்காக என்றும் நின்று இலகுறுவது நம் செந்தமிழ் மொழி. இதன்கண் மக்கட் பிறப்பின் பயனான, அறம் பொருள் இன்பம் வீடுகளைத் தெற்றென மக்கள் அறிந்துய்ய அறிஞரால் ஆக்கிய நூல்கள் பல அணி செய்கின்றன. இவ்வரும்பெரும் நூல்கள் அகமும் புறமும் ஆகிய பொருள்களைக் கிளந்தெடுத்தோதுவன.

அகமென்பது, உள்ளத்தின்கண் நிகழ்வது ; வெளிக்குத் தோன்றாதது. . அது, பல்லன ஆயினும் உணர்ப்புவயின் அறிவ தன்றி இவ்வாறென வெளிக்கு எடுத்துரைத்தல் இயலாதது. அது மனத்தினாலறியும் மாண்புடையது. அதுவே, காதலுணர்வு. பருவம் வாய்ந்த ஆடவர் பெண்டிர் அகத்தே பூத்துமலரும் பொற்புடையது. இதனை அகம் என்றனர் ஆன்றோர். புறமென்பது, வெளியே புலனாகும் நிலைகள். அவை : போர்முறை, களியாடல், ஆடல் பாடல் முதலிய யாவும் ஆகும். இவைகளைப் பிறருக்குக் கட்புலன், செவிப்புலன்களுக்கு வெளியே தோன்றும்வண்ணம் காட்டக்கூடியதாகலான், இதனைப் புறம் என்றனர், புலத்துறைமுற்றிய நலத்தினர்.

இவ்வகம் புறம் ஆகிய பொருள்கள் இத்தன்மைத்தென விதந்தெடுத்து முற்றமுடியக் கிளத்தும் இலக்கண நூல், ஒல்காப் பெருமைத் தொல்காப்பியம். இதன்கண் அகப்பொருள் நிலையை மிக விரித்துணர்த்தியுள்ளனர். இத்தொல்காப்பியம் மழைமேகத்தால் மறைப்புறும் ஞாயிற்றைப் போல் சிலகால் அறிஞர் கைக்குக் கிட்டியும், பலகால் கிட்டாதும் மறைந்து அவ்வேடு கிடையாததாயிற்று. அக்காலையில் கற்றுத்துறை போய பேரறிஞராகிய புலவர்கள் தம் நெஞ்சக ஏட்டில் பதித்தெழுதி வைத்து மாணவர்க்குப் பாடங் கற்பிக்கும் வாயிலாக இவ் வகப்பொருள் முதலியவற்றை உணர்த்திவருவாராயினர். அத்தகையாரும் பிற்காலத்து அருகலாயினர்.

அவ்வரிய காலத்தே மலர்ந்ததே களவியலெனப் பெயரிய இறையனார் அகப்பொருள் என்னும் இவ் விலக்கண நூல். இஃது, இறைவனால் அருளிச்செய்து உதவப்பட்டதென்பர். இது அறுபது நூற்பாக்களால் அமைந்தது. சுருங்கச்சொல்லி


  1. மதுரைக்காஞ்சி இறுதி வெண்பா.