பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

73

இவனேயாவான். இவன் சர்க்கார் பெரியபாளையத்தில் நள்ளாற்றில் அணையும் குளமும் ஏற்படுத்தினான். முறையே நஞ்சராயன் அணை, நஞ்சராயன் குளம் என்று பெயர் பெற்றுள்ளன. 24 கொங்கு நாட்டுச் செட்டியார்களையும் கூட்டி ஆலயப்பணிகள் செய்ய வைத்தான்.

கொடுமணல் பட்டயம், காரையூர்ச் செப்பேடு, தொறவலூர்ச் செப்பேடு ஆகியவை நஞ்சராயன் காலத்தவை. பாலவேளாளர் அதிகாரத்தில் இருந்த தொறவலூரை செம்பெரிச்சிக்கவுண்டருக்கு அளிக்கச் செய்து அவரைப்பட்டக்காரர் ஆக்கினான்.

வீரசிக்கராய உடையார் (1500-1527)

இவன் நஞ்சராய உடையார் மகன். இவன் கல்வெட்டுக்கள் ஈங்கூர், ஈரோடு, குறிச்சி ஆகிய இடங்களில் உள்ளன. இவன் காலத்தில் நஞ்சப்பராயர் என்பவர் பிரதானியாக இருந்தான். இவன் இறுதிக் காலத்தில் வீரராய தேவக்க மாமைய நாயக்கன் என்ற அதிகாரி சுயேச்சையாகக் கல்வெட்டுக்களைப் பொறிக்கத் தொடங்கினான். இவன் விசயதகர விருதுகள் பலவற்றைப் புனைந்துகொண்டான்.

நஞ்சண உடையார் (1527-1540)

இவனுக்கும் வீரசிக்கராய உடையார்க்கும் என்ன உறவு என்பது தெரியவில்லை. இவன் தந்தை அரிகரராயன் என்பவர். நஞ்சண உடையார் காலத்தில் நயினார் இராகுத்தப் பெருமாள் என்ற பாண்டியர் வழிவந்த ஒருவன் குறுப்பு நாட்டுப் பகுதியில் அதிகாரம் செலுத்தியுள்ளான். அவர் "திரிபுவனத்து ராசாக்கள் தம்பிரானார் பராக்கிரம பாண்டிய தேவர் திருமகன்" என்று கூறப்படுகிறார். இவர் ஒரு சிறு பகுதியைப் பெயரளவுக்கு நிர்வாகம் செய்தார்.