பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

ஈரோடு மாவட்ட வரலாறு

ஈடுபட்டனர். மைசூர் அரசர்களது திறமைக் குறைவால் மைசூரில் எல்லாப் பொறுப்புக்களையும் தளவாய்கள் ஏற்றனர். பெயருக்கு மட்டும் அரசர்கள் இருந்தனர்.

இரண்டாம் கிருஷ்ணராய உடையார் காலத்தில் 1641ஆம் ஆண்டு பவானி சங்கமேசுவர் கோயில் கல்வெட்டில் தளவாய் தேவராசய்யன் பெயரும், சர்வாதிகாரி நஞ்சராசய்யா பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டாம் கிருஷ்ணராச உடையார் கல்வெட்டுக்கள் ஈரோடு, துடுப்பதி, சிவகிரி ஆகிய இடங்களிலும் காணப்படுகின்றன. மலையப்பாளையம் கல்வெட்டில் அரசன் பெயர் இல்லாமல் தேவராயன் பெயர் மட்டுமே காணப்படுகிறது.

இவர்கள் காலத்தில் ஏராளமான கன்னட பிராமணர்கள் ஈரோடு மாவட்டத்தில் குடியமர்த்தப்பட்டனர். ராமசமுத்திரம், சாம்பள்ளி, சின்னாண்டி ஹள்ளி, மூலக்காடு, குள்ளவீரன ஹள்ளி, துக்கட நாயக்கன்ஹள்ளி, கோவிந்தப்பாடி, கிருஷ்ணராஜபுரம், திருக்கனம்பூர், தட்டாரபாளையம், கணக்கம்பாளையம், அக்கிரகாரம்பாளையம், கோபாலசமுத்திரம், முட்ட நாயக்கன்பாளையம், திருமலை செட்டி பாளையம், கலியனூர், லவகம்பாளையம் ஆகிய ஊர்களில் அவர்கள் குடியமர்த்தப்பட்டனர். பிறரிடமிருந்து விலைக்கு வாங்கி அவர்களுக்கு இனாமாக நிலங்களை அரசன் அளித்தான். ஊர் வருமானம் முழுவதும் சுங்கம், பேரம் உட்படப் பிராமணர்களுக்குப் கொடுக்கப்பட்டன. சில கணக்கர்களுக்கு கன்னட பிராமணர்களைக் குடியமர்த்துவதே வேலையாக இருந்தது.