பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22 ♦ அறிஞர் அண்ணா



நீடித்திருந்தால், உங்களைப் போன்றே தொல்லைகளை அனுபவித்துக்கொண்டுதான் இருந்திருப்பேன்!

வெறும் தலைவலி வந்தாலே தாங்க முடியவில்லையே! இந்த அரசு உங்கள் அரசுதான் என்றாலும், வாழ்வில் குறைகள் இருந்தால் வலி நிச்சயம் இருக்கும்!

என்னுடைய முறை, வலி பறந்து போகிறமாதிரி மெல்லத் தேய்கின்ற முறை.

கூடிய விரைவில் எங்களாலே முடிந்த அளவிற்கு உங்கள் குறைகளைக் கவனிப்போம் என்ற உறுதி தருகிறேன்.

(கோட்டை அரசு ஊழியர்களிடையே அண்ணா

ஆற்றிய உரை 6-3-67)

அரசாங்க அலுவலர்களான நீங்கள் ஆக்கப்பூர்வமான யோசனைகளைக் கூற வேண்டும். எனக்குப் பதவி வந்து விட்டதாகக் கருதி நீங்கள் ஒதுங்குவீர்களானால் பதவி எனக்கு ஒரு நோயாகவே மாறி விடும். ஆகவே, தாராளமாக யோசனைகளைக் கூறுங்கள்.

நீங்களும் நானும் சேர்ந்து செய்ய வேண்டியது நிரம்ப உண்டு; உணவு நெருக்கடியைத் தீர்க்க அரும்பாடு படுங்கள்; தொழில் வளத்தைப் பெருக்குவதில் உங்கள் அறிவாற்றலைப் பயன்படுத்துங்கள். பெருகுகின்ற தொழில் வளத்தின் மூலம் கிடைக்கக்கூடிய செல்வத்தைச் சமுதாயத்திற்கு முழுமையாகப் பங்கிட வழிமுறைகளை வகுத்துத் தாருங்கள். வெறும் செல்வத்தைவிட நிலையான கல்விச் செல்வத்தை எல்லா மக்களும் பெற வழி செய்யுங்கள்.

நம் முன்னாலே இருக்கின்ற பணிகள் மலைபோல் இருக்கின்றன. தனி ஒரு மனிதனாலோ, அவருக்கு துணையிருக்கும் ஏழு எட்டு அமைச்சர்களாலோ ஆகக் கூடிய காரியம் அல்ல இது. நீங்கள் அனைவரும் சேர்ந்து செய்ய வேண்டிய காரியம்.