பக்கம்:எழிலோவியம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7

இந்த இருவரினும் விஞ்சிய வகையில் உலக நிகழ்ச்சிகள், இயற்கைத் தோற்றங்கள் முதலிய பலவற்றையும் உள்ளூர நினைந்து பார்த்து உளமுருகிப் பாடி வருகின்றார். இவரிடம் பிற புலவர்களுக்குத் தோன்றாத புத்தம் புதிய கருத்துக்களை எல்லாம் நிரம்பக் காணலாம்.

'எழிலோவியம்' என்னும் பாடலில் கதிரவனின் காலைத் தோற்றத்தை, 'தொடுவான மதிலுக்கப்பால் தோன்றிடும் அழகைக் காண நடுவினில் துளைத்த சந்தோ?' என்று சொல்லுவது பிறர் யாரும் எண்ணிப் பார்க்காத ஒரு புத்தழகே யாகும். 'விளா மரத்தில் ஒளித்துண்ணும் அணிலோ கிள்ளை ஒளி மூக்கை மிளகாய் என்று களித்துண்ணப் பாயும்' என்னும் ஒவியம் சின்னஞ் சிறு குழந்தைகளின் உள்ளத்தினையும் கவரச் செய்கின்றது. அந்திவானத் தோற்றத்தினைச் செல்லுண்ட குடைக்கு உவமிப்பது மிகவும் பொருத்தம். கொன்றைச் செடியின் காய்களைக் குரங்கின் வாலுக்கு உவமிக்கின்றார். கிழவியின் முதுகினைக் கொட்டை முந்திரி முதுகு என்கிறார். இவ்விதம் பலப்பல புது உவமைகளை இவரிடம் நாம் காணலாம்.

இவருடைய பாடல்கள் படிப்போருள்ளத்தை மகிழச் செய்யும் பாடல் மட்டும் அன்று. அவர்களே பல முறை சிந்திக்கச் செய்து அவர்கள் உள்ளத்திலே புதிய கருத்துக்களையும் எழச் செய்யும் பாடல்களாகவே அவை திகழ்கின்றன. 'விளை வயல் பொட்டல் என்ற வேற்றுமை கருதாது என்றும் அளித்துயிர் ஓம்புகின்றாய்'-- 'பழக்கத்தால் உயர்வு தாழ்வு! படைப்பினால் அல்ல தம்பி!'-- 'உழைப்பவர்க்கு உயர்வு ஏன் இல்லை'-- 'விழிப்புத் தேவை'-- 'உணவன்றோ உயர்வு தாழ்வின் ஆணி வேர்'-- என்பன போன்ற அடிகளில் ஆழ்ந்த அரிய சமதருமக் கருத்துக்கள் நிரம்பி வழிகின்றன.

இவருடைய பாடல்களை உலகப் பெருங் கவிஞருள் ஒருவரான இரவீந்திரநாத் தாகூர் அவர்களின் பாடல்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழிலோவியம்.pdf/9&oldid=1300743" இலிருந்து மீள்விக்கப்பட்டது