பக்கம்:ஓங்குக உலகம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முரசுப்பாட்டு

165


‘பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்—உயிர்
பேணி வளர்த்திடும் ஈசன்
மண்ணுக்குள்ளே சில மூடர்—நல்ல
மாதர் அறிவைக் கெடுத்தார்’

எனச் சுட்டி, புவி நன்கு பேணப் பெற வேண்டுமானால் இருவரும் ஏற்றத் தாழ்வு இன்றி வாழவேண்டும் என்ற நீதியினை—நியதியினைச் சுட்டுகிறான்.

அடுத்து, சமயத்தால் வரும் மாறாட்டங்களும் போராட்டங்களும் அவன் கண் முன்பு வருகின்றன. நீதி புகட்டத் தொடங்குகிறான். ‘தெய்வம் பலப்பலசொல்லிப் பகை தீயை வளர்ப்பவர் மூடர்’ என்றே சாடுகிறான். எங்கும் நிறைந்த இறைவன் ஒருவனே என்ற உணர்வு அரும்பாத காரணத்தால்தானே இன்று நாட்டில் மீனாட்சிபுரம், ‘மண்டைக்காடு’ காட்சிகள் நம் கண்முன் தெரிகின்றன. இதுபோன்ற கொடுமைகள் நிகழக் கூடாதென்பதற்காகவே பாரதி இதை நீதியாகவே காட்டி அமைத்தான். ஆயினும் நாம் அதைப் படித்துக் கொண்டே—பேசிக் கொண்டே, பக்கத்திலேயே சமயப் போராட்டங்களைத் தீவிரமாக்கிக் கொண்டே வருகிறோம்.

இந்த உண்மையினை விளக்குவதற்கும் பாரதி ஓர் எளிய உண்மையினையே கையாளுகின்றான். வீட்டில் உள்ள பூனை பல குட்டிகள் போடுகின்றது. ஒன்று வெள்ளை, ஒன்று கறுப்பு, ஒன்று சாம்பல், ஒன்று பாம்பு நிறம். இந்த வேறுபாட்டால் அவை மாறுபட்டுப் போர் விளைப்பதைப் பார்த்திருக்கிறோமா! மேலும் அவற்றுள் ஒரு நிறம் உயர்ந்தது, ஒரு நிறம் தாழ்ந்தது என்ற வேறுபாடுகளைத்தாம் அவை கற்பித்துக் கொள்ளுகின்றனவா? இல்லையே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/168&oldid=1127984" இலிருந்து மீள்விக்கப்பட்டது