உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஓங்குக உலகம்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

168

ஓங்குக உலகம்


இரண்டு அவல நிலைகளும் மக்கள் வாழ்விலிருந்து நீக்கப்படவேண்டும் என வற்புறுத்துகிறான் பாரதி. இல்லையானால் அவற்றால் ஈர்க்கப்பட்டவன் ‘அடிமை’ அல்லன், ‘சிற்றடிமை’ யாவன் என்கிறார். அடிமையே சிறுமையைக் குறிக்கும்; சிறுமை என்னும் அடையைச் சேர்த்து, அந்தக் கேவலத்தை இன்னும் கேவலமாக்குகின்றான் பாரதி. அந்தக் காசுக்கும் அரசுக்கும் அஞ்சாது தலை நிமிர்ந்து ‘யாமார்க்கும் குடியல்லோம் யாதும் அஞ்சோம்’ என்ற அப்பரடிகள்தம் வாக்கின் வழியே அஞ்சாமை மேல் கொண்டு வாழ வேண்டும் என்கின்றான் அவன்.

‘செம்புக்கும் கொம்புக்கும் அஞ்சி—மக்கள்
சிற்றடிமைப் படலாமோ’

என்பது அவன் வாக்கு.

செம்பு என்பது காசு—பணம்—லஞ்சம் என்பதைக் குறிக்கும், கொம்பு என்பது ஆட்சியினைக் குறிக்கும்.

ஆம். இத்தகைய அஞ்சாமையும் தெய்வ உணர்வும் பெறின், கல்வியும் நல்ல நிலையில் நாட்டில் மலரும். யாரும் யாவும் விடுதலை பெறும்நிலை உண்டாகும். கல்வியின் வழியே அறிவு பெருகும். அந்த ‘எனைத் தாலும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தாலும் மாணா செய்யாத அறிவு மலரின், ‘யாருக்கும் தீமை செய்யாது புவியெங்கும் விடுதலை பெறும்’ என்று காட்டுகின்றான் பாரதி. ‘இப்படி மனித சமுதாயம் இயங்கினால் சிறியார் உயர்வார்; உயர்ந்தார், தெய்வத்தால் உயர்த்தப் பெறுவார். எங்கும் ஏற்றத்தாழ்வு அற்ற சகோதரத் தன்மை காட்டும் சம தர்மச் சமுதாயம் பாருக்குள்ளே முகிழ்க்கும்’ என்று கூறி இந்த ஒருமை உணர்வினையே தன் இறுதி அடிகளாக ஆக்கித் தருகின்றான் பாரதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/171&oldid=1127995" இலிருந்து மீள்விக்கப்பட்டது