பக்கம்:ஓங்குக உலகம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வளரும் தமிழை வாழவைத்தவர்

87


தம் உடல் நலம் தளர்ந்த நிலையிலும் உள்ளம் தளராது நோய் தாங்கிக் காவலர் (போலீஸ்) தம் தடியடியினைத் தாங்கித் தமிழுக்காகவே வாடி, வதங்கிச் சிறையிடைப் பட்டு உழன்ற காலத்தை எண்ணின் கண்ணில் நீர் முட்டுகின்றது. ஆம்! அத்தகைய அருமைத் தமிழ்த் தொண்டே-ஆக்கப் பணியே-மொழிப்பற்றே இன்று அவரைத் தமிழக முதல்வராக்கிற்று என்றால் இதில் யாரும் ஐயப்படமாட்டார்கள் அன்றோ!

எழுத்திலும் பேச்சிலும் தமிழ் நலத்தைக் கண்ட மக்கள் அண்ணாவிடத்தும் அவர்தம் தம்பியரிடத்தும் தம் உள்ளத்தைப் பறிகொடுத்த காரணம்தான், பாராளும் சட்டமன்றங்களில் அவர்தம் கழகத்தைச் சார்ந்த பலர் இடம்பெற ஏதுவாகின்றது. ஏழைத் தமிழ் மக்கள் தம் தெய்வத் தமிழ் நலம் காப்பார் யாரையும் காப்பார் என்ற உண்மையை நிறுவிவிட்டனர். எனவே கலைஞர் ஆட்சி தமிழகத்தில் மலர்ந்து சிறக்கின்றது.

கலைஞர்தம் பேச்சுத் திறனும் எழுத்தும் கவித்திறனும் நாடறிந்தவையே. ஆசுகவியாக அகில உலகம் புகழும் வகையில் அவர்தம் ஆக்கப்பாடல்கள் பல நாட்டு மூலை முடுக்குகளில் எல்லாம் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. மாற்றாரும் விரும்பிப் படிக்கும்வண்ணம் அவர்தம் தெள்ளிய துள்ளும் தமிழ் நடையை நாளிதழ், கிழமை இதழ்கள் வழியே காண்கிறோம். அவரைப் பழித்துரைக்கும் பத்திரிகையாளர்களும்கூட, அவர்தம் கவிதைகளையும் கட்டுரைகளையும் போட்டியிட்டு வாங்கி வெளியிடும் செயலொன்றே அவர்தம் கலைநலத்தை-கருத்து விளக்கத்தை-கலையுள்ளத்தைக் காட்டும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/90&oldid=1127588" இலிருந்து மீள்விக்கப்பட்டது