பக்கம்:கனிச்சாறு 2.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  89

அன்புதான் எதற்கு? மற் றறிவுதான் எதற்கு?
பண்புதான் என்ன? பணமே பயனா?
பெண்மை திரிந்திடில் ஆண்மை பிழைக்குமா?

காதல் என்றொரு தூய உணர்வினை
ஓதல் நல்லதோ? உணர்தல் நல்லதோ?
டையிலும் மார்பிலும் இணைவதோ காதல்?
தொடையிலும் வயிற்றிலும் தெரிவதோ காதல்?
கற்பனை இல்லாக் கயவோர் தம்கதை
விற்பனை யாகிடச் செய்யும் விரகிது! 200

“கோப்பையில் குடிபுகும்” கூவத்துப் பாவலன்
ஏப்பம் விட்ட வாடையில் எழுதும்
ஒற்றை வரிக்கே ஒரு நூறு என்றால்
அற்றைப் புலவரின் அழியா இலக்கியப்
பாடலுக் கெத்தனைக் கோடி படைப்பது?
ஊடலும் கூடலும் அவற்றில் இல்லையா?

புதுவைப் புலவன், புரட்சிப் பாவலன்
எதனைப் பற்றி எழுதிட வில்லை?
காதலைப் பற்றி உரையாக் கருத்தெது?
தீதாய் ஒருவரி தேர முடியுமோ? 210

பெண்மையின் மறைவைப் பிட்டுக் காட்டுதல்
பெண்மையின் சிறப்பை மண்ணிட்டுப் புதைக்கும்!
காமப் புனலுள் நீச்சல் கற்றவன்
ஏமக் காதலை விளம்புதல் எப்படி?
தெருக்கூத்துக் கோமாளி திரைப்படம் நுழைந்தால்
ஒருகூத்துக் கொருகூத்து ஒப்பாரி! ஆலோலம்!

'சுசீலா' என்றொரு குயிலிசைக் குரலியை
மசாலைப் பாடல்கள் பாடச் செய்வது
குழலினால் மலத்தைக் குழைப்பது போலாம்!

பழகு தமிழிசைப் பாடலைப் பாடினால் 220
எத்தனைத் தமிழ் உளம் இன்பத்தில் மிதக்கும்?
எத்தனைத் தாழ்வுளம் இதனால் உயரும்?
'தமிழுக்கும் அமுதென்று பேர்' எனும் பாடலைக்
கமழக் கமழக் கேளாத செவி எது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/125&oldid=1424678" இலிருந்து மீள்விக்கப்பட்டது