பக்கம்:கனிச்சாறு 2.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  105


64  செயலுக்கு முன் வருவோம்!

கொட்டிடு குப்பை நிறைவது போல், அலங்
கோல எழுத்தாளர் விஞ்சிவிட்டார்!
வெட்டிமுறிப்பவர் போல்,பலர் மேடையில்
வீணுரை யாற்ற முன் வந்து விட்டார்!
கட்டிய கோட்டை முழுவதிலும் வெறும்
கற்பனைப் பூண்டை, நிரப்புவதோ?
எட்டி நடையிடு வீர்?தமிழ் மாந்தரீர்,
ஏற்ற வினைகளைச் செய்திடவே!

உழைப்பைச் சிறிதென எண்ணிடும் மாந்தரிங்(கு)
ஊர்வலம் போகவே கூடிவிட்டார்!
பிழைப்பைப் பெரிதென எண்ணி விட்டார்; சிலர்
பேச்சையே மூச்செனப் பேசிடுவார்!
தழைப்பது வோ, தமிழ்ச் செம்பயிர் பேச்சினில்?
தன்மானங் கொண்டவர் முன்னெழுவீர்!
உழைப்பைப் பெரிதெனப் போற்றிடுவீர்! செயல்
ஒன்றே உயர்வென நாமுழைப்போம்!

-1971
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/141&oldid=1424762" இலிருந்து மீள்விக்கப்பட்டது