பக்கம்:கபோதிபுரக்காதல்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

கபோதிபுரக்

பஞ்சு அருகே நெருப்பை வைத்துவிட்டு, ‘பற்றி எரிகிறதே’ என்று பிறகு நொந்துகொள்வதில் என்ன பயன்” என்று வேதாந்தம் பேசிவிட்டு, விஷயத்தை எங்கும் மூச்சுவிடக்கூடாது என்று கோகிலம் கேட்டுக்கொண்டாள். கருப்பையாவுக்குக் கவலை அதிகரித்துவிட்டது. “அடடா! மோசம் வந்துவிடும் போலிருக்கிறதே, என்று கலங்கினான். சாரதா மீது அளவு கடந்த கோபம் அவனுக்கு. சும்மா விடக்கூடாது, கேட்டுத் தீர வேண்டும். சிறுக்கி இவ்வளவு தூரம் கெட்டுவிட்டாளா!” என்று எண்ணி ஏங்கினான்.

கோகிலத்துக்கு, தான் மூட்டிவிட்ட கலகம் வேலை செய்யுமென்று தெரிந்துவிட்டது. தன் சாகசப்பேச்சில் கருப்பையா போன்ற காட்டான்கள் ஏமாறுவது சுலபந்தானே என எண்ணி, அண்ணனிடம் தன் வெற்றியைக் கூறவும் சாரதாவும் கருப்பையாவும் தனியாகச் சந்திக்கும் நேரத்தில், இரசமான காட்சி நடந்தே தீருமெனச் சொல்லவும் சென்றாள்.

செல்வம் ஒருவருக்கு இருந்து மற்றொருவருக்கு இல்லாது போவது அவ்வளவு அதிகமான பொறாமையைக் கிளப்புவதில்லை. அது ‘கொடுத்து வைத்தவன்’, ‘ஆண்டவன் அருள்’, ‘பூர்வ ஜென்ம புண்ய பலன்’ என்ற சமாதானங்களால் சாந்தியாகிவிடும். ஆனால் காதல் செல்வத்தின் விஷயம் அங்ஙனம் அன்று.

“உருகி, உடல் உள்ளீரல் பற்றி” விடும் காதல். சம்மதக் கண்ணொளியால் தணிக்கப்பட்டு, காதல் விளையாட்டுகளால் சாந்தியாக்கப்பட்டு இன்பவெள்ளத்தில் மூழ்கி இருக்கும் ஒருவருக்குத் தன் காதலில் பிறனொருவன் புகுவதாகவோ, கெடுக்கவோ கண்டால் கோபமும் கொதிப்பும் உள்ளத்தின் அடிவாரத்திலிருந்து கிளம்பும்.