பக்கம்:கம்ப ராமாயண ஆராய்ச்சிக் கட்டுரை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

வரை எழுதப்பட்டும், அச்சிடப்பட்டும் வந்திருக்கிற ரீதியே தான் என்று ஏற்படும். இது வரையில் கையெழுத்திலும், அச்சிலும் வந்திருக்கிற பிரதிகளெல்லாம் புணர்ச்சிகளைப் பிரிக்காமலும், பதங்களைத் தனித்தனி எழுதாமலும், பொருளை நிச்சந்தேகமாகக் காட்டக்கூடிய குறிகளைச் சேர்க்காமலுமே எழுதப்பட்டும் அச்சிடப்பட்டுமிருக்கின்றன. இதனால் பாடம் கேட்காமல் படிக்க முயலுகிறவர்களுக்குச் செய்யுள்களைப் படிக்கும்போது கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போலிருக்கிறது. மகா வித்துவான்களிடம் முறையாகப் பாடம் கேட்டுத் தாங்களும் மகா பண்டிதர் என்று பேரெடுத்தவர்கள் கூட அங்கங்கே தடுமாறும் படி நேருகிறது. தமிழ் நாட்டில் மிகப் பிரபலமான பெயர்பெற்ற வித்துவான் ஒருவர் நாம் ஏற்கனவே எடுத்துக் காட்டிய 'நொய்தின் நொய்ய சொல் நூற்கலுற்றேன்' என்று ஆரம்பிக்கிற பாட்டில் 'எனை வைதவை' என்று அன்வயம் கூறி, அதற்கு 'என்னை வைத வசவுகள்' என்று பொருள் சொல்லிப் பிறகு, வாக்கியம் முடிவுபெறவில்லை என்பது கண்டு பாட்டை வேறுபல மாதிரி பிரித்துப் பார்த்தார். விருத்தங்களைத் தற்காலம் எழுதி வரும் ரீதியில் எழுதுவது இப்பேர்ப்பட்டவர்க்கே இடைஞ்சல் தந்தால் சாதாரண ஜனங்கள் படும்பாடு இப்படிப்பட்டது என்று சொல்லவேண்டாம்.

ஆகையால் படிப்பவர்களுக்கு எவ்வளவு சுலபமாக்கக் கூடுமோ அவ்வளவு சுலபமாக்கிக் கம்பராமாயணத்தை அச்சிடவேண்டும் என்கிற எண்ணம் எமக்கு நெடுநாளாக இருந்து வந்தது. ஆனால் வேறுபல காரணங்களுக்கிடையில் வித்துவான்கள் இந்தமாதிரிப் பதிப்பை ஒப்புவார்களோ என்கிற சந்தேகம் எம்மை இந்தக் காரியத்தில் புகுவதினின்றும் தடுத்து வந்தது. ஏனெனில் பண்டிதர்கள் திரஸ்காரம் செய்யக்கூடிய பதிப்பு பிரசுரிக்கத்தக்கதன்று. ஆனால் நாலாயிரப் பிரபந்தத்தைக் சந்தி பிரித்து அச்சிட்டிருப்பதில்