பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-- - தாயகம் அன்புள்ள பாண்டியனுக்கு, நலம். உன் கடிதம் கிடைத்தது. தாய் மொழியை எவ்வாறு பேணி வளர்க்க வேண்டும். ஏன் பேணி வளர்க்க வேண்டும் என்பனவற்றை நன்கு புரிந்து கொண்டதாக எழுதியிருக்கிறாய். மிக்க மகிழ்ச்சி. மொழிப் பற்றில்லாத மனிதன் முழு மனிதன் எனக் கருதப்படமாட்டான். எல்லா வகையாலும் மொழிக்கு உரிமை பெற நினைப்பதும், அதற்காவன செய்வதுமே மொழிப்பற்றாகும். செயல் முறைகளை விடுத்து, வறிதே ஆரவார ஒலிகளை எழுப்புவது மட்டும் மொழிப்பற்றென்று சொல்லிவிடமுடியாது. முதலில் அடிமைப் புத்தியை விட்டொழிக்க வேண்டும். உரிமையுணர்வு மேலோங்க வேண்டும். ஈடும் எடுப்புமிக்க இலக்கிய வளமிக்க நம் மொழி, அறிவியற் கலைவளமும் பெற்றுச் சிறப்புற முயலவேண்டும். மொழிப் பற்றைப் பற்றி முதற் கடிதத்தில் எழுத நேர்ந்தது. அதைத் தொடர்ந்து நாட்டுப் பற்றையும் விளக்கி இக்கடிதத்தில் எழுத எண்ணுகிறேன்.