பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவியரசர்-முடியரசன் 223 படுத்திக் கொள்ளும் பேராற்றல் வாய்ந்தது. அதனால் பிற நலங்களை விடச் சிறந்ததென்று இதனைக் கூறுவது பொருத்தமேயாகும். சிலர், நிறைந்த நூல்களைக் கற்கின்றனர்; பட்டங்கள் பலவும் பெறுகின்றனர்; கல்விச் சிறப்புடையராக விளங்கு கின்றனர். ஆயினும் அவர், தாம் கற்றறிந்த நூல்களையோ, தம் கருத்துகளையோ விரித்துரைக்க இயலாதவராகித் தடுமாறு வதைக் காண்கிறோம். சில செடிகளும் கொடிகளும் கொத்துக் கொத்தாகப் பூத்து மலர்ந்து காட்சியளிக்கும்; கண்ணுக்கு விருந்து நல்குமாறு வண்ணங்கள் மிகுந்திருக்கும். ஆயினும் அம்மலர்களில் சிறிதேனும் மணத்தைக் காண்டல் அரிதாக இருக்கும். மணம் வீசாத இம்மலர்களுக்கும், கற்றதை விரித்துரைக்கமாட்டாத கல்வியாளர்க்கும் என்ன வேறுபாடு ? ஒன்றுமேயில்லை. வண்ணங்களுடன் அழகுற மலர்ந்திருப்பினும் மணமில்லாக் காரணத்தால் அவற்றை மக்கள் விரும்பார்; விரும்பிச் சூடார். அதைப் போலவே பட்டங்களும் கல்வியும் எவ்வளவு பெற்றிருப்பினும் சொல்வன்மையில்லாரை உலகம் நன்கு மதிக்காது; மதித்துப் போற்றவுஞ் செய்யாது. கல்வியுடன் சொல்வன்மையும் வாய்க்கப் பெறின், அது பொன்மலர் மணம் வீசுவது போன்றதாகும்; பொதுவாகவே மணம் வீசும் மலரை மக்கள் விரும்புவர்; அம்மலரும் பொன் மலராக இருந்துவிடின் கேட்கவும் வேண்டுமோ? அதுபோல நன்கு கற்று, நாவன்மையும் பெற்று விளங்கும் ஒருவரை உலகம் உச்சிமேல் வைத்துப் போற்றும்.