உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுப்பாடும் அடக்கமும் உடையவனாக இரு என்று மிக மிக வற்புறுத்திக் கூறவிரும்புகிறேன். கட்டுப்பாடில்லாத நூறு மனிதர்கள், கட்டுப்பாடுள்ள ஒரு மனிதனுக்கு ஈடாக மாட்டார்கள் என்று நம் தலைவர்கள் அடிக்கடி சொல்லி வந்துள்ளனர். கட்டுப் பாடிருந்தால் எச்செயலையும் வெற்றியுடன் முடிக்கலாம். எடுத்துக் காட்டாக உன்னையே எடுத்துக் கொள். நீ கட்டுப்பாட்டுடன் இருந்தால்-தேர்வு முடியும் வரை திரைப்படங்களுக்குச் செல்ல மாட்டேன் என்று, உறுதிபூண்டு படித்து வந்தால் கட்டாயம் இறுதித் தேர்வில் முதல்வனாக வெற்றி பெறுவாய். இப்பொழுதே கட்டுப்பாடுடையவனாக இருந்தால், பிற்காலத்தில் நீ வாழ்வுப் பாதையில் நுழையும் போதோ அரசியற்றுறை போன்ற வேறு துறைகளில் இறங்கும் போதோ கட்டாயம் உயர்வு பெறுவாய், வெற்றி பெறுவாய், கட்டுப்பாட்டால் நன்மையுண்டு என்பதற்கு எடுத்துக்காட்டு காந்தியடிகள் ஒருவர் போதாதா? அடக்கமும் அவ்வாறுதான். அடக்கமுள்ளவன் உயர்வான், அடக்கமில்லாதவன் தாழ்வான் என்ற கருத்தை, 'அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்’ என்று மிக அழகாகக் கூறியிருக்கிறார் வள்ளுவர். இக்குறள் எப்பொழுதும் உன் உள்ளத்தே ஒலித்துக் கொண்டிருக்க வேண்டும். ஆசிரியர் சொற்களுக்கு அடங்கி நட ஆசிரியரிடம் பணிந்து பேசு. என்னை எவ்வாறு எண்ணுகிறாயோ அவ்வாறே உன் ஆசிரியரையும் எண்ணு. ஆசிரியருக்குப் பணிந்து நடக்கப் பழகாவிட்டால் நீ நாளை யாருக்குப் பணிந்து நடக்கப் போகிறாய்? பணிவு தாழ்வு தரும் என்று எண்ணி விடாதே என்றும் உயர்வே தரும்.