பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஞானப்பனுவல்

259


அதிசயத் தேனீ, இப்படிச் சிவபெருமானின் ‘திருவடி மலரையே’ நாடிச் சென்றது. இன்பத்தை - இறவாத இன்பத்தை நுகரத்தானே தவிர வெறும் பெருமையோ சிறப்போ கருதியன்று. அத் திருவடி மலரில் அவர் பெற்ற அனுபவத்தின் எச்சமே திருவாசகம். இவ்வாறு எச்சமும் மிச்சமுமான திருவாசகமே இத்துணை இனிமை பயக்கிறது என்றால், முழு இன்பத்தையும் பெற்ற மாணிக்கவாசகரின் அனுபவம் முழுவதையுமே நாம் பெற்றால் எவ்வளவு இன்பமாக இருக்கும்!

நாடு திசைமாறிப் போய்க் கொண்டிருந்த நிலையில், மக்களை அவர்களின் முயற்சியின் வழியாகவே திருவருள் இன்பத்தையடையச் செய்யும் பணியில் ஈடுபட்டார் மாணிக்கவாசகர். பருவத்திற்கும் தொழிலுக்கும் ஏற்ப அவர்களை அவர்கள் தம் வழியிலேயே செலுத்தி இறையருள் இன்பத்தை எய்துவிக்க அம்மானை, பொற் சுண்ணம், ஊசல் முதலிய பல்வேறு பாக்கள் பாடினார். மக்கள் மீதுள்ள கருணைப் பெருக்காலேயே அவர் இவ்வாறு செய்திருப்பார் என்று கருதுவதும் தவறாகாது.

“சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை?” என்கிறார் மாணிக்கவாசகர். இன்று, போட்டி போட்டுக் கொண்டு புற அழகைப் பெருக்குதற்கான ஆர்வமும் சாதனைகளும் அளவு கடந்து பெருகியுள்ளன. புற அழகு மட்டும் போதாது-அக அழகும் வேண்டும் என்று வலியுறுத்தினார் மாணிக்கவாசகர்.

பால் பானையை உட்புறத்தே கழுவாமல் வெளியே மட்டும் தேய்த்துக் கழுவிவிட்டுப் பாலை ஊற்றிக் காய்ச்சினால் அந்தப் பால் எப்படியிருக்குமோ அப்படித் தான் இருப்பார்கள் சித்தம் அழகில்லாதவர்கள். பசுவை உடல் முழுதும் நன்றாகத் தேய்த்துக் கழுவிக் குளிப்பாட்டி விட்டுப் பால் கறக்கும் மடியை மட்டும் கழுவாமல் விட்டு விட்டால்