பக்கம்:சங்க கால வள்ளல்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

குறப் பகர்ந்துள்ளார். இவன் அம்பு எய்தலில் ஆற்றல் மிக்கவன். இவன் எய்யும் ஓர் அம்பினால் பல விலங்குகளையும் அலக்கழிக்கும் ஆண்மை பெற்றவன். இவன் ஒருமுறை எய்த அம்பு, “பெரிய வாயுடைய புலியை இறக்கச்செய்து, துளை பொருந்திய மருப்பினையுடைய புள்ளிமான் கலையினைக் கீழே உருட்டி, உரல்போலும் தலையுடைய பன்றி ஒன்றினை விழச்செய்து, அதன்பின் அவ்வேனத்தின் அயலதாக இருந்த உடும்பினையும் தைத்தது” எனப் பரணர் பாராட்டியுள்ளார்.

இப்படி எய்ய வல்லவன் ஓரி என்பதை உணர்ந்த பரணர் முற்றும் மகிழ்ந்து தம்முடன் இருந்தவர்களை நோக்கி, “சுற்றங்காள்! இப்படி வேட்ட மேல் நாட்டங் கொண்டவன் நம் வல்வில் ஓரியோ எவனோ? என்றாலும், யான் ஒருவண்ணம் பாடுகிறேன். நீங்கள் மத்தளத்தில் மார்ச்சனையிட்டு முழக்குங்கள்; யாழிலே பண்ணமைத்து வாசியுங்கள்; யானையின் துதிக்கை போலும் நீண்டுவளைந்த பெருவங்கியத்தை இசையுங்கள்; சல்லியை வாசியுங்கள்; சிறு பறையை முழக்குங்கள்; பதலையினைக் கொட்டுங்கள்,” எனக் கூறிப் பாடவும் பல்லியங்களை இசைக்கவும் கூற, அங்ஙனமே பரணர் சுற்றம் செய்தது. அப்பாடலையும் ஆடலையும், இசைக்கருவி முழக்கத்தினையும் கேட்ட ஓரி, அவர்கட்குத் தான் வேட்டையில் எய்த மானினைத்தானே பக்குவப்படுத்தி, உணவையும் சமைத்து, மலைத் தேனையும் பருக ஈந்ததோடு நில்லாது, பொன்னால் ஆகிய மணி ஆரங்களையும் தந்தனன்.