பக்கம்:சங்க கால வள்ளல்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

தன் நாட்டு வளங்காணப் பணியாட்களுடன் வெளியே சென்றான். ஒவ்வோர் இடமாகக் கண்டு களித்துக்கொண்டே வந்தான். வான்முகில்கள் வரைகள் மீது தவழ்ந்து ஏகும் பொலிவைக கண்டு பூரித்தான். அக்கொண்டல்கள் மலைகட்குக் கவிகை தாங்கி நிற்பன போலும் எனக் கற்பனை செய்து களிப்புக்கொண்டான். கானமயில்கள் ஈட்டம் ஈட்டமாகவும், கூட்டம் கூட்டமாகவும் குலவி விளையாடுவதைக கண்டான். அவற்றுள் ஒன்று தனித்துத் தன் தோகையினை விரித்துக களிப்புடன் ஆடுவதையும் கண்ணுற்றான். அம்மஞ்சை மேகங்கண்டு மோகங்கொண்டு தோகை விரித்து ஆடுகின்றது என்பதை ஓராதவனாய், அது குளிர்க்கு வருந்தித் தன் தோகையை விரித்து ஆடுகின்றதே? என்று எண்ணி , அதன் நளிரினைத் தீர்க்க யாது வழி என்று சிந்தனை கொண்டான். அவன் சிந்தனைக்கு யாதொன்றும் புலனாகவில்லை. தான் அணிந்திருந்த விலைமதித்தற்கரிய பொன் ஆடையை அதற்குப் போர்வையாக ஈவதே பொருத்தமானது என்று உறுதி கொண்டான். அவ்வாறே தான் மேலே அணிந்திருந்த பீதாம்பரத்தினை அத்தோகைக்கு இத்தோன்றல் ஈந்து உள்ளம் மகிழ்ந்தான். இதனைப் பாராட்டிப் புலவர் பாடிய பாட்டுக்கள் மிக மிக அருமைப்பாடுடையன :

உடாஅ போராஅ ஆகுதல் அறிந்தும்
படாஅம் மஞ்சைக்கு, ஈத்த எங்கோ
கடாஅ யானைக் கலிமான் பேகன்.

என்பதும்,