பக்கம்:சங்க கால வள்ளல்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5

ளின் மூலம் அனுப்புதலின்றித் தான் இவர்ந்து போந்த இரதத்தினையே அது படர்தற்கு அதன் அண்மையில் நிறுத்தி, அக்கொடியினையும் அதன் மேல ஏற்றித் தான் நடந்தே தன் திருமாளிகையை நோக்கித் திரும்பினான். இவன் தேர் இன்றித் தமியனாய் வருதலைக் கண்ட அமைச்சரும், தானைத் தலைவர் முதலான மற்றுமுள்ளோரும் இறும்பூதுற்று, இவன் அருகேவந்து உசாவ, இவன் நடந்த வண்ணம் நலின்றனன். அவர்கள் யாவரும் பாரியின் வள்ளன்மையை வாயாரப் புகழ்ந்தனர். “ஓர் அறிவு உயிரான முல்லைக்கொடிக்கு ஆழியீந்த அருமை வள்ளலே” என்று பாராட்டியும் பேசினர். இப்புகழ், நகர் எங்கும் நாடெங்கும் பரந்தது. இவனது இச்சீரிய செயலால், இவன் தலைசிறந்த கொடையாளி என்பது புலனாகவில்லையா ?

கபிலர், பாரியின் மகளிரை இருங்கோவேள் என்பானுக்கு அறிமுகப்படுத்திக் கூறவேண்டிய நிலையேற்பட்டது; அந்நிலையிலும் பாரியைப்பற்றி வேறு எதையும் கூறாமல், இவன் முல்லைக்குத் தேர் ஈந்த கொடைத் திறத்தினேயே எடுத்து மொழிந்தனர். இவ்வாறே விச்சிக் கோவிடமும் பாரி மகளிரை மணந்துகொள்ளவேண்டி அவர்கள் இன்னார் என எடுத்துக்காட்டுகையிலும், “பூத்தலை அறாஅப் புனைகொடி முல்லை, நாத்தழும்பு இருப்பப் பாடாதாயினும், கறங்குமணி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்த, பரந்து ஓங்கு சிறப்பின் பாரிமகளிர் ” என இதனையே எடுத்து மொழிந்துள்ளார். ஆகவே, இவன் முல்லைக்குத் தேர் ஈந்த சிறப்பு மூவுலகு முற்றும் எட்டியது புலனாகிறது.