பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

262

செந்தமிழ் பெட்டகம்

சீவகன் தன் ஆசிரியனால் தன் பிறப்பினுண்மையுணர்ந்து, ஆசிரியன் ஆணைப்படி ஓராண்டு வரையில் காத்திருந்து, கட்டியங்காரனைக் கொன்று அரசைக் கைப்பற்றினான் அந்த ஓராண்டின் இடையிலே இவனைக் கட்டியங்காரன் சிறைப்படுத்திக் கொண்டு வரும் போது சுதஞ்சணன் என்னும் கந்தருவனால் காப்பாற்றப்பட்டான். பிறகு, தன் மாமன் துணை கொண்டு கட்டியங்காரனைக் கொன்றான் இவன் முற்பிறப்பிலே அன்னப் பறவையைச் சிறைப்படுத்தியதால் இப்பிறப்பிலே சிறைப்பாட்டான் என்பர்.

இவன் இசைக்கலை முதலிய பல கலைகளிலும் வல்லவன், யாழின் அமைப்பையெல்லாம் அறிந்தவன் இசையால் கந்தருவப் பெண்ணாகிய தத்தை என்பவளை வென்று மணந்தான். இவளேயன்றி குணமாலை, பதுமை, கேமசரி, கனகமாலை, விமலை, சுரமஞ்சரி, இலக்கணை என்னும் பெண்களும் இவன் மனைவியர் இவன் தன் அன்னையைத் தன் பிறப்புணர்ந்த ஓராண்டின் முடிவிலே கண்டு தன்னுடன் அழைத்து வந்தான் அதுவரை அவள் உயிரோடிருப்பதை அறிந்திலன்.

இவன் சமண சமயத்தில் சிறந்த பற்றும் அறிவுமுள்ளவன்; சிறந்த வீரன்; வல்லமை மிக்கவன்; ஆடவருக்குரிய இலக்கணங்களெல்லாம் அமைந்தவன்; நன்றி மறவாதவன், அருளாளன், ஊக்கம் மிக்கவன், வள்ளல்; சமணர்கள் சீவகனைத் தெய்வமாக வழிபடுவர்.

இவன் கதை தமிழில் சீவக சிந்தாமணி, சிந்தாமணிமாலை என்னும் நூல்களில் உள்ளது வட மொழியில் உள்ள க்ஷத்திர சூடாமணி, கத்தியசிந்தாமணி, சீவந்தர நாடகம், சீவந்தரசம்பு என்னும் நூல்கள் இவன் கதையையே கூறுகின்றன. மகாபுராணத்தின் ஒரு பாகத்திலும், ஸ்ரீ புராணத்தின் ஒரு பாகத்தும் இவன் கதை கூறப்பெற்றுள்ளது.